திங்கள், நவம்பர் 30

PM 11:43
10

உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு காரணங்களுக்காக பலதாரமணம் புரிவர். இவ்விசயத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் மதத்துக்கும் கூற வித்தியாசம் உண்டு.   இந்தியாவைப் பொறுத்தவரை பலதாரமணம் சட்டப்படி குற்றம்.  மலைஜாதி மக்களில் இந்த பழக்கம் இருக்கிறது என கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் மற்றவர்கள் சட்டத்தை அலட்சியம் செய்துவிட்டு  தெரிந்தும் தெரியாமலும் பலதார மணம் புரிவது  உண்டு.  பண வசதியைப் பொருத்தும்  ஜாதி மதம் நோய் மரணம் உடல் குறைபாடு என்று ஏதோ ஒரு காரணத்தை சொல்லி இரண்டு மூன்று பேரை கல்யாணம் செய்வதும் உண்டு.  சட்டத்தின் பார்வைக்கு வராதவரை இவை ஏதும் பிரச்சனையாக இருந்ததும் இல்லை.  அரசியல்வாதியாக இருந்தால் ஒருத்தரை மனைவி என்றும் மற்றொருவரை துணைவி என்றும் சொல்லி சமாளித்து  கொள்ளலாம். 

ஆனால் ஒரு ஊரில் உள்ள அத்தனை பேரும்  பலதாரமணம் புரிகிறார்கள் என்பதை அறியும் போது முதலில் ஆச்சர்யமாக இருந்தது, உண்மை தெரிந்ததும்  மிக அதிர்ச்சியாக இருக்கிறது. இது ஏதோ  அயல்நாட்டில் நடக்கவில்லை நமது இந்தியாவின் இதயபகுதியான மகாராஷ்டிராவில் (Dengalmal village) உள்ள ஒரு ஊரில் நடக்கிறது,  பலதாரமணம் ஒன்றே அவர்களின் பிரச்சனை தீருவதற்கான ஒரே வழி  !!!??



தானே மாவட்டத்தில்  டெங்கல்மல் என்ற ஊரில் அரசாங்கத்தின் குடிநீர் விநியோகம் என்பது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை டேங்கர் லாரியில் வரும் ஆயிரம் லிட்டர் கலங்கிய நீர் மட்டுமே...அதை பிடிக்க ஒரே சமயத்தில் பலரும் போட்டிப்போட்டுக் கொண்டு   முட்டி மோத, இதற்கு காத்துகிடந்து மல்லு கட்டுவதை  விட கிணறு தூரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று பல பெண்கள் நடையை கட்டி விடுகிறார்கள். அந்த ஊரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில்  உள்ள மலையடிவாரத்தில் இருக்கும் இரண்டு கிணறுகள் மட்டும்தான்  இவர்களின் ஒரே நீர் ஆதாரம்.  பலமணி நேர நடையும் பலமணி நேர காத்திருப்பும் இருந்தால் தான் இரண்டு குடம் தண்ணீர் கிடைக்கும்.  40 டிகிரி வெயிலிலும் அடர்ந்த இரவுகளிலும் தண்ணீரை நாடி  நடந்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த ஊரின் ஆண்கள் வாழ்வதற்கான பொருளாதாரத்தை தேட பெண்கள் தண்ணீர் மனைவிகளாக மாறுகின்றனர்.  

அந்த ஊரை சேர்ந்த ஒருவர் சொல்கிறார், இது சட்டப்படி குற்றம் என்பது தெரியும் ஆனால் என்ன செய்வது யார் எங்களுக்கு தண்ணீர் கொடுப்பது,  அரசாங்கம் எங்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் தவறு செய்கிறது , அதனால் தண்ணீர் தேவைக்காக மூன்று மனைவிகளை மணந்து நானும் ஒரு தவறு செய்யவேண்டியதாகிறது. இது எங்களின் தவறல்ல அரசாங்கத்தின் தவறு என்று கூறும் அந்த வெள்ளந்தியானவரின் குரலில் ஒலிப்பது தண்ணீரின் தாகம்.  வீட்டிற்குள் நுழையும் புது பெண்தான் இள வயதின் காரணமாக தண்ணீர் கொண்டு வரும் பொறுப்பிற்கு மாறுகிறார். இவரின் முதல் இரு மனைவிகள் சமையல் குழந்தைகளை வளர்ப்பது  மாடுகளை கவனிப்பது விவசாயத்தில் கணவருக்கு உதவுவது என்றிருக்க மூன்றாவது மனைவி தண்ணீர் சுமக்கிறார்.  



தண்ணீருக்கான போர் இனி வரவேண்டும் என்பதில்லை இந்தியாவில் ஏற்கனவே பலகாலமாக நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.   பிரசவம் முடிந்து குழந்தை பிறந்த  பத்தாவது நாள் முதலே  தண்ணீர் கொண்டுவர கட்டாயப் படுத்தப்  படுகிறார்கள்.  இத்தகைய தண்ணீர் மனைவிகளுக்கு முதுகு வலி, கழுத்துவலி, கருவுருதலில் பிரச்சனை, வளர்ச்சி குறைபாடு, வழுக்கை (தலையில் சுமப்பதால்)  இன்ன பிறவும் ஏற்படுகின்றன. பெண்களை தவிர சிறு வயதினரும் பள்ளிகளுக்கு செல்லாமல்  தண்ணீர் சுமக்கிறார்கள். இள வயதிலேயே  மனமும் உடலும் சோர்வுற்று நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களின் எதிர்காலம் சூன்யமாவதை பற்றி யாருக்கிங்கே கவலை...?! 

இது இந்தியாவில் ஒரு மாநிலத்தில் உள்ள  ஒரு கிராமத்தின் அவலநிலை  மட்டுமல்ல.  இது போல் பல ஊர்கள் இருக்கின்றன. ஆட்சி பொறுப்பேற்கும்  அத்தனை ஆட்சியாளர்களும் சரமாரியாக வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள் , இவர் வந்தால் விடிந்துவிடும் என்று நம்பி ஓட்டு போட்டு ஆட்சி கட்டிலில் உட்கார வைத்துவிடுகிறார்கள்.  ஆனால் குறைந்தபட்ச தேவைகளான  குடிநீர், கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகளை கூட செய்துத் தராமல் டிஜிடல் இந்தியா கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  

பொழியும் மழை நீர் வடிய தேவையான வடிகால் வசதி இன்றி தெருவெங்கும் தேங்கி பலவித தொற்று நோய்கள்  பரவுகிறது.  பருவக்காலத்தை கணக்கிட்டு மழை நீரை சேமிக்கும்  ஏரி குளங்களை பாதுகாத்து தூர் வாரி வைக்கலாம். (ஏரி குளத்தையே காணும்  அப்புறம் எங்க தூர் வார ...?) எவ்வளவு மழை பெய்தாலும் அவ்வளவும் கடலுக்கு சென்று சேருகிறது. நீர் சேமிப்பு, நீர் மேலாண்மை பற்றிய அரசாங்கத்தின் அலட்சியம் மேலும் தொடர்ந்தால் இன்று டெங்கல்மல் கிராமத்தின் நிலை தான் இன்னும் சில வருடங்களில் மொத்த இந்தியாவிற்கும் நடக்கும். 
    
டிஜிடல் இந்தியாவின் மறுபக்கம் தண்ணீரை தேடும் அவலம் !!?

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் : முடிந்தால் டெங்கன்கல் ஊரை பற்றிய செய்தியை பகிர்ந்துக் கொள்ளுங்கள்... Let's work together, spread the story and make the government take notice  

ஆங்கிலத்தில் உள்ள இந்த லிங்க்கை ஷேர் செய்தால் கூட போதுமானது. 

http://www.indiatimes.com/news/india/waterwives-men-marry-multiple-women-and-leave-them-by-the-wells-in-this-indian-village-233693.html

நேரம் இருப்பின் யூ டியூபில் உள்ள இந்த விடியோவை பாருங்கள்.


பின்குறிப்பு :-

இங்கே மழை வெள்ளம்னு ஆயிரம் பிரச்சனை இருக்கு, அதை பத்தி கவலை இல்ல, எங்கயோ குடிக்க தண்ணீ இல்லன்னு சொல்ல வந்துட்டாங்க என்பது  உங்களின் எண்ணமாக இருக்கலாம். அதை பற்றி பேசவும் எழுதவும் ஏன் ஓடோடிச் சென்று உதவி செய்யவும்தான்  நீங்க இருக்கிங்களே  என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. அதுதான் சொந்த மாநிலத்தை பற்றிய கவலையை உங்களிடம் விட்டு விட்டு அடுத்த மாநிலத்தை பற்றி பேசுகிறேன்.  புரிதலுக்கு நன்றி. 

- கௌசல்யா  

நன்றி 
கட்டுரை :- ஆங்கில இணையப் பத்திரிகைகள்  
படங்கள் - கூகுள் 
Tweet

10 கருத்துகள்:

  1. கொடுமையாக இருக்கிறது சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பக்கத்தில் மழை நீரின் மிகையால் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கும் மக்கள் ... மற்றொரு பக்கம் நீரின்றி இந்த கொடுமை நடக்கிறது !!?

      இரண்டுமே வேதனை !!

      வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
  2. இப்படியுமா...? வியப்பாகத்தான் இருக்கு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியப்புடன் அதிர்ச்சியாகவும் இருக்கிறது...

      வருகைக்கு நன்றி தனபாலன் சார்.

      நீக்கு
  3. நல்ல கட்டுரை. இதைப் பற்றிப் படித்ததும் உண்டு..சகோதரி.

    வெங்கட்ஜி (வெங்கட் நாகராஜ்) கூட இதைப் பற்றி அவரது தளத்தில் எழுதியிருந்தார்.

    நம்மூரில் இந்த வெள்ளம் முழுவதும் கடலைச் சென்று அடைகின்றது..என்ன பிரயோசனம்? நீர் மேலாண்மையும் சரி, நகர மேலாண்மையும் சரி, திட்டமிடுதலும் சரி எதுவுமே செய்யாததால் வந்த விளைவு. இயற்கையை எல்லோரும் பழிக்கின்றனர். நாம் செய்யும் தவறுகளுக்குத்தான் இந்த அல்லல்...இங்கு வெள்ளம்...அங்கு தண்ணீருக்காகப் பல மணங்கள்..இந்தியா கணினித் துறையில் வல்லரசு!!!

    அருமையான பகிர்வு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் எழுதி இருந்தாரா, நான் கவனிக்காமல் இருந்துவிட்டேனே ...

      ம்...இயற்கையை பழிப்பதால் எதுவும் மாறிவிட போவதில்லை... அமைதியும் ஆக்ரோஷமும் அதன் இயல்பு ...அதை மறந்து அதை வென்றுவிட மனிதன் முயலும் போதெல்லாம் தனது ஆக்ரோஷத்தை காட்டி மனிதனின் தலையை தட்டி வைக்கிறது !!

      ஒரு பக்கம் வெள்ளம் மறுபக்கம் வறட்சி ... !!

      இனியாவது நாமும் நமது அரசும் நீரின் அவசியத்தை உணரவேண்டும். ஏரி , குளங்களை வெட்டி தூர் வாரியும், வேண்டிய அத்தியாவசிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தும் வைக்க வேண்டும்.

      வாசிப்பிற்கு நன்றிகள்

      நீக்கு
  4. தண்ணீருக்கான கஷ்டம் பெரிய கஷ்டம்தான்... ஆனா, இந்த ஊர் ஆண்களுக்கு நம்ம மக்களை மாதிரி சைக்கிள்ல, டிவிஎஸ் 50 ல குடம் கட்டி தண்ணீர் கொண்டுவரத் தெரியாதா இல்லே வேணும்னே செய்யிறதில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கேள்வி , ஒருவேளை அந்த கிணற்றிற்கு செல்லும் பாதை கரடுமுரடான மலை பாதையாக இருக்கலாம் என நினைக்கிறேன், எனக்கும் இதுகுறித்து தெரியவில்லை.

      பெண்கள், சிறுவர் சிறுமியர் நடந்து செல்லலாம் என்றால் ஆண்கள் சென்று எடுத்து வரலாமே... பலதாரமணம் ஏன்?? மிகவும் யோசிக்க வேண்டிய ஒரு கேள்வியை எழுப்பி உள்ளீர்கள்.

      கருதிட்டமைக்கு நன்றி சுந்தரா

      நீக்கு
  5. அறியாத மனம் வருத்தும் தகவல் தோழி..
    நீர் மேலாண்மை மிகவும் அவசியமான நேரத்தில் இருக்கிறோம் ..

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...