திங்கள், ஜனவரி 7

AM 11:25
7



இன்றைய பெண்கள் குறிப்பாக சிறுமிகள் மனதில் ஆண்கள் என்றாலே மோசமானவர்கள் என்பதை மிக அழுத்தமாக இது போன்ற மோசமான நிகழ்வுகள் பதியவைத்துவிடுமோ என்றே வருந்துகிறேன். அருவருக்க தக்க இச்செயல்களை ஒரு சில ஆண்கள் செய்வதால் ஒட்டுமொத்த ஆண்சமூகமும் தலைகுனிந்து நிற்கிறது. நடக்கும் சம்பவங்களுக்கு  ஆண்கள் மட்டுமா காரணம் !!?? என ஒரு கேள்வியும் உடன் எழுகிறது...

ஓடும் பேருந்தில் பலரால் சிதைக்கப்பட்டு இறந்த இளம் பெண், ஆசிட் வீசப்பட்டதால் வாழ்வை தொலைத்தவள், எதிர்வீட்டுக்காரனால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கபட்டுவிட்டாள் என தந்தை கையால் கௌரவ(?)கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி, பாலியல் வன்முறையால் கொல்லப்பட்ட சிறுமி புனிதா, வீட்டில் இருந்த 4 ஆம் வகுப்பு மாணவியை இருவர் சிதைத்த கொடுமை......... இவை எல்லாம் விட கொடுமை பிளே ஸ்கூல் படிக்கும் மூன்றை வயது குழந்தையை வன்கொடுமை புரிந்த பள்ளி உரிமையாளரின் கணவன் !!??

ஊடகத்திற்கு வந்தவை கொஞ்சம், ஆனால் இப்படிபட்ட அல்லது இதை விடவும் மோசமான கொடுமையான நிகழ்வுகள் உலகம் முழுவதும் அதிக அளவில், விதவிதமாக பெண்களின் மீது காலங்காலமாக நடந்துக்கொண்டிருக்கின்றன, மீடியாக்களின் உபயத்தில் இன்று அதிகரித்து வருவதை போல தெரிகிறது...

இணையத்தின் விவாதப்பொருளா ?!

டெல்லியில் நடந்தது மட்டும் இப்போது பெரிதுபடுத்தி பார்க்கப்படுகிறது,  பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் ஏன் இல்லை என இணையத்தில் காரசாரமான கருத்துக்கள் கண்டேன்.   ஊடகங்கள் செய்யாவிட்டால் என்ன தனி மனிதர் ஒவ்வொருவரும் போராட வேண்டியது தானே ?! நமக்கு அருகில், தெருவில் ஒரு பெண்ணிற்கு அநீதி இழைக்கப்படும் போது நம்மில் எத்தனை பேர் வேடிக்கை மட்டும் பார்த்து கடந்து சென்றிருப்போம்.

பெண் பாலியல் வன்முறை செய்யப்பட்டுவிட்டாள் என தெரிந்ததும் ஆவேசத்துடன்  சரமாரியாக கருத்துக்கள் இடுபவர்களில் சிலர் முகநூலில் நடிகையின் படத்தை வெளியிட்டு மட்டமாக வர்ணிப்பவர்கள் !! மனதில் இவ்வளவு வக்ரத்தை வைத்துகொண்டு பெண்ணுக்கு ஆதரவாக கருத்திடும் வேடதாரிகள் ஒருவகையில் குற்றவாளிகள் தான் ! உடலை தீண்டி சிதைத்தால்தான் வன்முறையா ? பார்வையால், பேச்சால்  பெண்களை கேலிப்பொருளாக்குபவர்கள் செய்வதற்கு பெயரும் வன்முறைதான்   !!

பெண்களை போகப்பொருளாக எண்ணி பேசுபவர்கள் நிறைந்திருக்கும் உலகம், இப்போது பெண்களைப்பற்றி புதிதாக கவலைப்படுவது தான் வினோதம் !!
  
மேலும்

என்னவோ எல்லோரும் தமிழ்நாட்டுக்கு வெளில வாழ்வதை போல 'டெல்லியில் போராடுறாங்க, தமிழ்நாட்டுல ஏன் யாரும் போராடல' என்று முகநூல்,ட்விட்டர்ல  பொங்கறத பார்த்தபோது வேடிக்கையான வேதனை !!??  ஏதோ சொல்லனும்னு கண்டபடி உளறி இந்த மாதிரி நிகழ்வுகளை தயவுசெய்து  வெட்டி விவாதப்  பொருளாக்கி வேடிக்கை பார்க்காதீர்கள் !!  நடந்த கொடுமையை விட இது மிக அதிகமாக வலிக்கிறது !!

இது போன்ற செய்தியை சில நாள் பேசுவதும் பின் மொத்தமாக மறந்து விடுவதுமாக இருக்கும் நாம் தான் மன்னிக்கவே முடியாத குற்றவாளிகள் !! .

போராட்டம் ??

பாலியல் வன்முறைக்கு எதிராக கொடிப்பிடிக்கிறோம் என்ற பெயரில் போடப்படும் கோஷங்கள் அறிக்கைகள் எல்லாம் தங்கள் உடை சுதந்திரத்தில் யாரும் தலையிட கூடாது , என் உடல் என் விருப்பம் என்பது மாதிரியாக த்தான் இருக்கிறது !! எங்கோ ஒரு மூலையில் நிமிடத்திற்கு ஒரு முறை பெண் கொடுமைக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறாள், அவற்றை எதையும் கண்டுகொள்ளாத ஆணுலகம் ஒரு புறம் என்றால், பெண்கள் இயக்கமும், அமைப்புகளும் அமைதியாகவே  இருக்கிறது !

இரோம் ஷர்மிளா என்ற பெண்ணின் பல வருட தொடர் உண்ணாநிலை போராட்டம் இன்று வரை பெரிதுபடுத்தப்படாமல், முடிவும் எட்டப்படவில்லை. எந்த பெண்ணுரிமை இயக்கங்களும் இதனை அவ்வளவாக தீவிரப் படுத்தவும் இல்லை ?! அவருக்கே நீதி கிடைக்காத நாட்டில் வேறு எந்த பெண்ணிற்கு கிடைத்துவிட போகிறது...??!!

தூக்கில் போட்டால் எல்லாம் சரியாகிவிடும்?!!

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு அரசும் அதிகாரிகளும் என்ன செய்வார்கள், அவர்கள் மட்டுமா பொறுப்பு ?! தனி மனித ஒழுக்கம் என்பது இல்லாத வரை எந்த அரசும் என்னவும் செய்ய முடியாது ! அந்த 6 பேரை தூக்கில் போடுவதுடன் முடிந்துவிடுமா அத்தனை கேவலங்களும், அசிங்கங்களும் ?! நிச்சயமாக இதுவல்ல தீர்வு...?!!

குற்றச்செயலின் போது, உணர்ச்சி வசத்தின் பிடியில் சிக்கி இருப்பவர்களுக்கு உயிர் பயம் சுத்தமாக இருக்காது, ஈடுபடும் செயலை முடித்தே தீரவேண்டும் என்ற வெறி மட்டுமே  மனதை ஆக்கிரமித்து இருக்கும் என்ற நிலையில் தண்டனையை பற்றிய எண்ணம் எப்படி வரும் ?

நடக்கும் அத்தனை பாலியல் கொடுமைகளும் வெளிவருவதில்லை...  ஏதோ ஒன்றோ இரண்டோ மட்டுமே வெளி உலகம் அறிகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்பத்தினர் மறைத்துவிடும் அளவில் தான் நமது சமூக அமைப்பு இருக்கிறது. கேவலம் அவமானம் போன்றவைகள் உயிர்ப்புடன் இருக்கும் வரை பெண்மை மௌனம் சாதித்துத்தான் ஆகவேண்டும் போல...!!

குற்றவாளியை தூக்கில் போடணும், அடிச்சே கொல்லனும் என்கிற ஆவேசமான ஆர்பாட்டங்களை மதிக்கிறேன். ஆனால் இதனால் மட்டும்  இது போன்ற பிரச்சனைகள்  முடிவுக்கு எப்படி வரும்...??!  வன்முறைக்கு மற்றொரு வன்முறை என்பது போல் ஆகுமே தவிர குற்றங்கள் குறைந்துவிடுமா?.  பலிக்கு பலி என்று மனதை சமாதானம் பண்ணிக்கொள்ளலாம், அதே நேரம் இப்படிப்பட்ட பலியை எதிர்பார்க்கும் நமக்கு  என்ன பெயர் ???! 

இன்று இவர்கள் 6 பேரை தூக்கில் போட்டுவிடுவோம், அதே நேரம் இன்னும் பலர் தினசரி செய்திகளில் தொடர்ந்து வருகிறார்களே...அவர்களை என்ன செய்வது...அதன்பிறகு நாளை சிலர் வருவார்களே...அவர்களை...???!!!  தண்டனைகள்  தொடர்கதையாகுமே தவிர வேறு என்ன நடந்துவிடும்.  மாற்றம் வந்தாகவேண்டும்...சமூகத்தில்...அரசியலில்...கல்வியில்...மனிதமனங்களில்...!!

சட்டங்கள் என்ன செய்யும் ??

ஒவ்வொரு கொலை, மரணங்கள்  ஏற்பட்ட பின்னரே விழித்துக்கொண்டு சட்டங்களை இயற்றும் நம் அரசு. பள்ளி கூரை தீப்பிடித்து நூறு குழந்தைகள் இறந்தால், பள்ளிகளை கண்காணிக்க உத்தரவு!  பள்ளி வேனின் ஓட்டையில் குழந்தை விழுந்து இறந்ததும் வாகனங்கள் லைசென்ஸ், பராமரிப்பை தீவிரமாக செக் பண்ணுவார்கள்... இப்போது இந்த பரிதாப டெல்லிப் பெண் கிடைத்துவிட்டார் புதிதாக சட்டங்களை இயற்ற 

கடுமையான தண்டனைகள் கொடுக்ககூடிய சட்டங்களை இயற்றுங்கள் என்பது பலரது கூக்குரல் !! சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த நாவரசு கொலை பலருக்கு நினைவிருக்கலாம். நாவரசின் கை கால்களை தனித்தனியாக வெட்டி சூட்கேசில் மறைத்த குற்றவாளி ஒரு மருத்துவ கல்லூரி மாணவர் ! உலகமே அதிர்ச்சி அடைந்த அந்த கொடூர கொலைக்கு தண்டனை கிடைக்க 15 வருடம் ஆனது. ராகிங் தடுப்பு சட்டம் (Tamil Nadu Prohibition of Ragging Act)ஒன்றும் அதன் பிறகு இயற்றப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை வேறு ராகிங் குற்றங்களே நடக்கவில்லை என்பது உண்மை என்றால் , பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களை இயற்ற சொல்லி போராடலாம் தவறே இல்லை !! 

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை வைத்து  பிடிக்காத கணவன்/ கணவன் வீட்டாரை பழிவாங்கும் சில பெண்கள் இருக்கிறார்கள். அதை  போல இதற்காபோடப்படும் சட்டங்களும் தவறாக பிரயோகிக்கப்படலாம் ...  

அரசாங்கம் 

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம் என்று மத்திய அரசும், சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என மாநில அரசும் சிறிதும் மனசாட்சி இன்றி சொல்கிறது. வேறு என்ன செய்ய முடியும் அவர்களால் ?? மக்கள் அரியணையில் அமரவைத்ததற்கு இதையாவது சொல்ல வேண்டாமா?? இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவி செய்வதுடன் அரசு தனது பொறுப்பை முடித்துக்கொள்கிறது. சுயநல அரசுகள், கையாலாகாத அதிகாரிகள், ஊழலுக்கு துணை நிற்கும் நீதி மற்றும் காவல்துறை, இவை  எல்லாவற்றையும் விட முதுகெலும்பில்லாத நம் மக்கள் !!!

இணைய தளங்களில் ஆவேசபடுகிற அளவில் தான் மக்களின் தைரியம் இருக்கிறது. அப்படியே ஒரு சிலர் உண்மையாக கருத்திட்டு கோபத்தை காட்டினாலும் சைபர் கிரைம் என்ற பயத்தை காட்டிவிட்டது அரசு.

சமூகம் !!

மக்களால்  கட்டி அமைக்கப்பட்ட இந்த சமூகம் இப்போது மது என்னும் கொடிய அரக்கனாலும், மின் தடையாலும் முடக்கிப்போடப்பட்டுள்ளது. தொழில், வேலை, விவசாயம் பாதிப்பது  ஒரு பக்கம் என்றால் இரவில்  தடை செய்யப்படும் மின்சாரத்தால் சரியான தூக்கமின்றி பகலிலும் தொடரும் உடல், மன சோர்வு, மன உளைச்சலில் கொண்டுபோய் விட்டு விடுகிறது. சிந்தனைகள் முழுவதும் எதன் வசமோ சென்றதை போல் மந்திரித்துவிட்ட கோழியாக வலம்  வருகிறார்கள் மக்கள். இங்கே மக்கள் என்று குறிப்பிடுவது  சென்னையை தவிர்த்த பிற பகுதிகளை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். 

மனம் தடுமாற குடியை காரணம் சொல்கிறான் ஒருவன், ஓ அப்படியா என்று கேட்பதுடன் இங்கே நம் அனைவரின் கடமையும் ஏறக்குறைய முடிந்தே விடுகிறது. குடிக்கிற எல்லோருமா தவறு பண்றாங்க என்ற மேதாவிகளின் விமர்சனங்களை சகித்துகொள்ளவும் பழகிகொள்ளவேண்டும் .

திரைத்துறை, தொலைக்காட்சி, மீடியாக்கள் 

திரைப்படம் விளம்பர படம் எடுக்கும் ஆண்களால் தான் கலாச்சாரச்சீரழிவு  என்ற கருத்துகள் விமர்சனங்கள் சுத்த அபத்தம் ! அவர்கள் படம் எடுக்கிறார்கள் என்றால் அதற்கு துணை போகும் பெண்களை என்னவென்று சொல்வீர்கள்...??! உடை குறைக்கவேண்டும், ஆபாச காட்சி இருக்கிறது என்றால் முடியாது என மறுக்காமல் அதற்கு  உடன்படும்  பெண்கள் இருக்கும் வரை இந்த சீரழிவு தொடரத்தான் செய்யும் !! தனது விருப்பத்திற்காக , பணம் புகழுக்காக தனது உடலை, பெண்மையை  கடைவிரித்துவிட்ட பெண்களால் நிரம்பி இருக்கிறது திரைத்துறை, விளம்பர மீடியாக்கள் !! 

பெண்களின் அங்கங்களை கேமரா ஜூம் செய்ய அனுமதித்துவிட்டு கேமராவை  குறை சொல்வதை போல் இருக்கிறது படம் எடுப்பவர்களை குறை சொல்வது ... 

இளைஞர் கூட்டத்திற்கு  தன் அங்கங்களை காட்டிவிட்டு, 'நான் காட்டுவேன் அதை நீ பார்த்து சலனபடகூடாது' என கூறுவது என்ன லாஜிக் தெரியல...உணர்ச்சிகள் அற்றவர்களா மனிதர்கள் ?!! இன்றைய இளைஞர்கள் கையில் இருக்கும் மொபைல் போன் ஒன்று போதும் எத்தகைய மோசமான நிகழ்வுகளையும் நிமிடத்தில் கண்டுகளிக்க......இதற்கு மத்தியில் வாழும் இன்றைய இளைஞர்கள்  ஒரு விதத்தில் பரிதாபத்துக்குரியவர்கள், இவர்களுக்கு எது சரி எது தவறு என்று வழிகாட்ட பெற்றோர்களோ, கல்வியோ, சமூகமோ இல்லை. 

பெண்களின் உடைதான் காரணம் என்ற கருத்துகளை படிக்கும் போது  இப்படி கேட்கத் தோன்றுகிறது...திரைப்படங்களில் நடிகைகளின் அரைகுறை உடைகள்  பாலியல் உணர்வுகளை தூண்டுகிறது இனிமேல் அது போன்று உடை அணியக்கூடாது, நாகரீகமாக இருக்கவேண்டும் என அரசாங்கம் கடுமையான உத்தரவு பிறப்பித்தால் என்ன...?!! (முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள், அப்புறம் பார்க்கலாம்........!!)

குற்றவாளிகள்  எங்கும் இருக்கிறார்கள்?!

பல ஹாஸ்டல் அறை சுவர்கள் கூட சொல்லும்... பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல் மாதிரியிலான(?) கதைகளை !! ஒரு சிலர்  உடன்பட்டும் மற்றவர்கள் சகித்துக்கொண்டும் கடத்தவேண்டும் நாட்களை!

ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் ஏன் ஒவ்வொரு வீட்டிலும் கூட ஒரு குற்றவாளி இருக்கலாம் மனபிறழ்வு, மனச்சிதைவு, தாழ்வு மனப்பான்மை, போட்டி பொறாமை, பழி வாங்கும் எண்ணம் , வன்மம்  நிரம்பிய மனது சந்தர்ப்பம் கிடைப்பதற்காக காத்திருந்து சந்தர்ப்பம் அமைந்தால்,  அப்போது தெரியும் நேற்றுவரை சாதுவாக தெரிந்த இவனா இப்படி என்று...!!???

டெல்லி பெண் விசயத்தில் பிடிபட்ட ஒருவரின் வயது 17,  மற்றொருவனுக்கு 18 இருக்குமாம் ??!! என்ன கொடுமை இது !! பாலியல் வெறியை தணித்துகொண்டதுடன் நில்லாமல் உறுப்பை சிதைத்து.......????!! இவர்களின் ரத்தத்தில், மூளையில், உடல் செல்களில் எதில் கலந்திருக்கும் இத்தகைய  வன்மம் !?  அந்த பெண்ணை பார்த்த அந்த கணத்தில் ஏற்பட்ட வன்மம் மட்டும் அல்ல இது, மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு பாதிப்பு, கோபம், காயம், வலி, வடு இருந்திருக்கிறது... அது இப்போது வெளிவந்து கோரத்தாண்டவம் ஆடிவிட்டு அமைதி அடைந்திருக்கிறது .

ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒரு மிருகம்... அன்பிற்கு அர்த்தமோ...ஆண் பெண் பேதமோ...மனித நேயமோ...இடம் பொருளோ...எதுவும் தெரியாது அவ்வளவு ஏன் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து வந்ததும்  மறந்து போகும்...
மிருகம் வெளிப்படும் அந்த வேளையில்...

பாலியல் இன்பத்திற்காக, பாலியல் வறட்சி காரணமாக இவை நடக்கின்றன என்றால் நாம் இன்னும் மனித மனதை சரியாக புரிந்துகொள்வில்லை என்றே அர்த்தம்!

ஏதோ ஒன்றை அடைய முயன்று அது முடியாமல் இப்படி தீர்த்துகொள்கிறார்கள்  என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் இதில் உண்மை இருக்கிறது. எதிலும் நிறைவு அடையாமை, மேலும் மேலும் வேண்டும் என்பதை போன்ற மனதிற்கு, ஏதோ ஒரு வடிகால் தேவை படுகிறது, சமூக சீரழிவு அரங்கேறுகிறது! 


மனிதநேயம், சக மனிதரின் மீதான அன்பு குறைந்து காழ்ப்புணர்ச்சி அதிகரித்துவிட்டது. நம் மதங்கள் கடவுளை முன்னிறுத்துகின்றனவே தவிர  ஆன்மீக விழிப்புணர்ச்சியை கொடுக்கவில்லை. மனிதனுக்குள் இருக்கும் ஆத்மாவை தூய்மை படுத்த முயற்சி செய்யாமல் தனி மனித துதிகள் பெருகிவிட்டது. 

ஒரு குற்றம் நடந்ததற்கு பின்னால் மறைமுக கா'ரணங்கள்' இப்படி பல இருக்கின்றன, ஆனால் செய்தவன் மட்டும் குற்றவாளி என கூண்டில் ஏற்றப்படுகிறான்...! வன்மத்தால் கொடுமை செய்தவனுக்கு தண்டனை வாங்கி தருவது பெரிய காரியமல்ல, வன்மம் ஏற்படாமல் தடுக்க என்ன வழியோ அதை செய்வதே மிக நல்லது !!

* * * * * * * * * * * * *
பாலியல் வன்முறை பெண்கள்  மீது மட்டுமல்ல பெண்களாலும் நடந்துகொண்டிருக்கிறது என்பது கொஞ்சமும்  ஜீரணிக்கமுடியாத உண்மை !! நேரம்  இருப்பின்  படித்து பாருங்கள் - பெண்களா இப்படி ??!!
மற்றும் எனது இரண்டு பதிவுகள் உங்கள் பார்வைக்கு
ஒரு அலசல் - குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு 
குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு ஏன்...?
* * * * * * * * * * * * * * 
பெண்களே காரணம்? பெற்றோர் காரணமா? இந்த பிரச்னைக்கு தீர்வு ஏதும் இருக்கிறதா ?? 
தொடர்ந்து பேசுவோம்...சிந்திப்போம் !!

Tweet

7 கருத்துகள்:

  1. //ஒரு குற்றம் நடந்ததற்குப் பின்னால் மறைமுகக் காரணங்கள் பல இருக்கின்றன//

    நூற்றுக்கு நூறு உண்மை.

    பிரச்சினையை நுணுக்கமாக ஆராய்ந்திருக்கிறீர்கள்.

    நன்று.

    பதிலளிநீக்கு
  2. நீண்ட விவாதத்திற்குரிய விளக்கமான வேதனை தரக்கூடிய விசயங்களை பகிர்ந்து இருக்கிறீர்கள் .

    பாலியல் கொடுமை பல காலமாக தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் கடந்த வருடத்தில் அதிகமாக செய்திகள் வேயே தெரிய காரணம் மின்தடை அதனால் வேலை இழப்பு .......வேலை இல்லாமல் சும்மா இருக்கும் மனிதனின் மனம் சாத்தானின் இருப்பிடம் அது சகல அயோக்கிய தனத்தையும் செய்ய விளையும் .......ஆகவே வேலையில்லாமல் இருக்கும் ஆண்கள் இன்றைய நவீன இணையத்தை தவறாக தங்கள் கைபேசியில் பயன்படுத்துகிறார்கள் கூடி பேசுவதும் அருகில் இருக்கும் பெண்களை அந்த கண்ணோட்டத்துடன் பார்ப்பதும் நேரம் கிடைக்கையில் வான் புணர்வுக்கு உட்படுதுவதுமாக தங்களை மறந்து தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள் .....அதே சமயம் காலையில் வேலைக்கு செல்லும் ஒருவன் மாலை வெட்டுக்கு வந்த பின் அவனுக்கு உடல் களைப்பு காரணமாக ஓய்வு எடுக்கவும் குடும்பத்தோடு மகிழ்ச்சியாய் இருக்கவும் மட்டுமே நேரம் இருக்கும் அப்படி பட்ட சூழலில் அவன் அண்டை வீட்டை எட்டி பார்க்கவும் தீய செயல்களில் ஈடு பாடவும் நேரம் இருக்காது ஆகவே வேலையில்லா திண்டாட்டம் ஒரு காரணம் இன்னொரு காரணம் தனி மனித ஒழுக்கம் அப்பா மது அருந்துவார் கட்டின வெட்டி கீழே விழ ரோட்டில் விழுந்து கிடப்பார் ,போதை தரும் வஸ்துகளை போட்டு மகன் முன்னாள் நடப்பார் ரோட்டில் துப்புவார் ,தகாத வார்த்தைகளில் பேசுவார் ஆனால் பையன் மட்டும் ஒழுங்கா இருக்கனும் என்று கண்டிப்பார் இது என்ன கொடுமை முதலில் பெற்றோர்கள் பிள்ளைகள் முன் முன்மாதிரியாக நடந்து கொள்ளுங்கள் அவன் தானாகவே மாறிவிடுவான் .அவனின் எண்ணைகளை அறிய முன் வாருங்கள் அவனிடம் அன்பாய் இருங்கள் பரு வயதில் இன்னும் அதிக அன்பையும் கவனிப்பையும் கொடுங்கள் அவன் மனம் நிறைந்து இருக்கும் பொது நிச்சயம் வேறு தேடலில் ஈடுபட மாட்டான் ஆகவே பெற்றோகள் தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்து பிள்ளைகளை அப்படி வளர செய்ய்ங்கள் மூன்று ஆன் பெண் பாகுபாடு இல்லாத வளர்ப்பு பெண்ணை கண்ணகியை போல இரு என்று சொல்லும் வாயால் ஆணை கோவலனை போல இருக்காதே என்று கண்டிக்க வேண்டும் சமமான கவனிப்பை அன்பை கொடுத்தால் நாளைய தலைமுறை இத கொடுமையில் இருந்து தப்பும் .

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரி...
    மிகவும் ஆழமான சிந்தனையுடன்
    பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி...

    உண்மை உண்மை உண்மையே...
    எங்கோ யாரோ செய்த தவறால்
    ஒட்டுமொத்த ஆண்சமூகமே
    தலைகுனிந்துள்ளது என்பது நிதர்சனம்...

    வன்மம் தலைக்கேறி தனமனித ஒழுக்கம் என்பது
    என்னவென்றே அறியாத ஒருகூட்டம்
    கிளம்பி இருக்கிறது...
    வேதனைக்குரிய விஷயம்...

    யாரையும் ஒட்டுமொத்தமாக நீங்கள் தான் இதற்கு காரணம்
    என்று கட்டம்கட்டிவிட முடியாது...
    பெண்களை மதிக்கும் ஆண்களும்
    ஆண்களை மதிக்கும் பெண்களும்
    இன்னும் இருப்பதால் தான்
    இன்னும் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது....

    இன்று தொழில்நுட்பமும் ஊடகமும் வளர்ச்சி பெற்றதால்
    எல்லா நிகழ்வுகளும் கண்முன்னே உடனுக்குடனே
    காட்சியாகிறது...
    ஆனால் பாலியல் வன்கொடுமை காலங்காலமாக
    நடக்கும் மிகப்பெரிய கொடுமையாகவே இருந்து வருகிறது...

    இலக்கியங்களும் இலக்கணங்களும் நன்கு வளர்வதற்கு முன்னமே
    நாட்டுப்புற வாய்மொழிப்பாடல்கள் மூலம் கலைகளின் வழியே
    பாலியல் வன்கொடுமைகளை அன்றே சாடி இருக்கிறார்கள்...
    ஆனால் என்ன ஒரு வேதனை என்றால்
    அது இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது...

    என்னால் இந்தப் பதிவுக்கு கொடுக்க முடிந்த
    ஒரே பதில்...
    ஆணாகினும் பெண்ணாகினும்
    தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்கவேண்டும்....
    அப்படிச் செய்தாலே.குற்றங்கள் குறைந்துவிடும்....

    பதிலளிநீக்கு
  4. @@ பசி பரமசிவம்...

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. @@ கோவை மு சரளா...

    ஆம் தோழி. இதை குறித்து நிறைய பேசலாம், எழுதலாம்.

    பெற்றோர் தன் குழந்தைகளுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கவேண்டும்...குழந்தைகள் தடம் மாற, தீய செயல்களில் ஈடுபட பெற்றோரின் கவனிப்பின்மை மிக பெரிய காரணம். இதை குறித்து தொடர்ந்து எழுதணும். இங்கே உங்களின் கருத்துகளை நோட் செய்துகொண்டேன், விரிவாக எழுதுகிறேன்.

    மிக்க நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு
  6. @@ மகேந்திரன்...

    //ஆணாகினும் பெண்ணாகினும்
    தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்கவேண்டும்....//

    உண்மை. நம் குழந்தைகளுக்கு கல்வி நிலையங்கள் பாடங்களுடன் ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து கற்றுத் தரவேண்டும், சக மாணவியிடம்/மாணவனிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தல் வேண்டும்.

    பெற்றோர்களின் வளர்ப்பில் கவனம் மிக தேவை

    உங்களின் வருத்தத்துடன் கூடிய பின்னூட்டம் மிக யோசிக்கவைக்கிறது

    என் நன்றிகள் மகேந்திரன்

    பதிலளிநீக்கு
  7. பெற்றோர், ஆசிரியர்களின் சரியான வழிநடத்துதல் இல்லாமை.. சுய ஒழுக்கம், கட்டுப்பாடு இல்லாமை..
    பெண்ணை போகப் பொருளாக மட்டுமே சித்தரிக்கும் திரைப்படங்கள் இப்படி பல காரணங்கள்..

    உலக நாடுகளில் ஒழுக்க நெறிகளுக்கு பெயர் போன இந்தியாவில் இப்படி நடப்பது வேதனைக்குரிய விஷயம்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...