புதன், மே 2

AM 11:13
26

உணவு உலகம் திரு சங்கரலிங்கம் அவர்கள் மகளின் திருமணம் கடந்த புதன் அன்று 25/04/2012  திருநெல்வேலியில் வைத்து நடைபெற்றது. அன்று வருகை தருபவர்களுக்கு எங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக மரகன்றுகளை வழங்கலாம் என முடிவு செய்தோம்.

'ஈஸ்ட் தொண்டு' நிறுவனத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பசுமை விடியல் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதில் ஒன்றாக சங்கரலிங்கம் அண்ணன் வீட்டு திருமணத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டதும் அண்ணன் சந்தோசமாக அனுமதி கொடுத்தார்.



மரகன்றுகளை வாங்க பலரை அணுகினேன், முக்கியமாக நமது அரசின் வனத்துறை ! ஆனால் அவர்கள் கூறிய சட்ட திட்டங்கள் எனக்கு மரகன்றுகள் இலவசமாக கிடைப்பதற்கு தடையாக இருந்தது. பலவாறு வேண்டியும் ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு அவர்கள் கூறிய காரணங்கள்: "கன்றுகளை பெறுபவர்கள் முறையாக பராமரிக்கிறார்களா என நன்கு தெரிய கூடிய நிலையில் தான் அரசு இலவசமாக கொடுக்கும், இப்படி தனித் தனியாக கொடுத்தால் நாங்கள் எவ்வாறு கணக்கு எடுக்க முடியும், ஆயிரம் பேரின் முகவரியும் கொடுக்க முடியுமா?" என கேட்டனர்.

இதில் இப்படி ஒரு சிக்கலா என மிக வருத்தத்துடன் நாட்கள் செல்ல இறுதியாக உதவி செய்ய கேட்டு சங்கரலிங்கம் அண்ணனை சரண் அடைந்தேன். பரபரப்பான திருமண வேலைக்கு மத்தியிலும் அண்ணன் அவரது நண்பர் திரு.முத்துக்குமார் அவர்களிடம் தொடர்பு கொண்டு எனக்கு தேவையானவற்றை செய்யச் சொன்னார். 

அவரின் உதவியால் குற்றாலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மரக் கன்றுகள் கிடைத்தன.

எனது ஆதங்கம் என்னனா 'எங்கும் பசுமை, எதிலும் பசுமை' என சூளுரைக்கும் அரசு எங்களை போன்று சேவைகள் செய்ய முன்வருபவர்களுக்கு அந்த சட்டம், இந்த சட்டம் என சுட்டி காட்டிக்கொண்டு இராமல் தாராளமாக உதவினால் என்ன ?! விரும்பி கன்றுகளை வாங்கிச் செல்பவர்கள் அதனை எப்படி வீணாக்குவார்கள்...? நட்டு பராமரிக்கவே செய்வார்கள் என்பதை இவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். 

திருமணத்தன்று...

பெங்களூரில் இருந்து வந்திருந்த பிரபுவும் நானும் கன்றுகள் வழங்க வேண்டிய ஏற்பாடுகளை செய்தோம். உதவிக்கு அழைத்ததும் மறுக்காமல் வந்தான் நெல்லையை சேர்ந்த சகோதரன் சிராஜ். கன்றுகளுடன் பையினுள் சிறு குறிப்பு எழுதப்பட்ட துண்டு பிரசுரம் வைக்கும் யோசனையை எங்களிடம் கூறியது எறும்பு ராஜகோபால் தான். முன் தினம் இரவில் எல்லோருமாக அமர்ந்து பேசிகொண்டிருந்த போது "உங்களின் நோக்கம் என்ன ? நீங்க யார் ? என்பதை பற்றிய சிறு விளக்க குறிப்பு இருந்தால் நன்றாக இருக்கும்" என்றார். நல்ல யோசனையாக இருந்தது ஆனால் அவர் சொல்லும் போது நேரம் 8  மணி, பின் வேகவேகமாக எழுதி பிரபு + சிராஜ் இருவரிடம் கொடுத்து பிரிண்ட் பண்ண கொட்டும் மழையில் அனுப்பி வைத்தேன்...காலையில் வந்து சேர்ந்தது கட் செய்யபடாமல்...கட் பண்ண கத்தி தேட, சிசர் தேட என கொஞ்ச நேரம் அல்லாடி, சங்கரலிங்கம் அண்ணாவின் நண்பர் வந்தார் உதவிக்கு...!! மக்கள் வர தொடங்கவும் நம் பதிவர்கள் வந்தார்கள் உதவிக்கு, ஆளுக்கு ஒரு கன்றை எடுத்து பையில் வைத்து அரேஞ் பண்ணினார்கள்.(இதை ஏன் விரிவா சொல்றேனா, பலரின் ஒத்துழைப்பால் மட்டுமே இந்த சேவை சாத்தியப்பட்டது  .



திருமணம் நடைபெறும் ஹாலில் திரு. சிதம்பர பாண்டியன் சார் மரகன்றுகள் விநியோகிக்க இருப்பதை பற்றியும், வீட்டில் வைக்க இடவசதி இருப்பவர்கள் மட்டும் இந்த இளந்தளிர்களை பெற்று செல்ல வேண்டுமாறு அறிவித்தார்.அவருக்கு என் நன்றிகள்.

அங்கே நடந்தவற்றில்... 

மனம் கவர்ந்த சில சந்தோஷத் துளிகள் 

* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் லைபிரேரியன் திருமதி.திருமகள் விழிகள் விரிய ஆர்வமாக பசுமை விடியல் பற்றிய அனைத்தையும் கேட்டறிந்தார்.தனக்கும் சுற்றுச்சூழல் குறித்தான விசயங்களில் ஆர்வம் இருப்பதாகவும், இனி பசுமைவிடியல் மேற்கொள்ள போகும் அத்தனை சேவையிலும் அவரை அழைக்க வேண்டுமென செல்பேசி எண்ணை கொடுத்தார். "உங்கள் கல்லூரியில் மரம் நடுவதை நாங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறோம், அனுமதி கிடைக்குமா?' என்றேன், 'நேரில் வாருங்கள், முயற்சி செய்வோம்' என்றார். நமக்கு இது போதாதா, அடுத்த வாரம் போய்ட வேண்டியதுதான்.

* திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திருமதி. விஜிலா சத்யானந்த் அவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு மாடியில் இருந்து கீழிறங்கி எங்களை கடக்க முயன்றவர் திரும்பி, 'என்னது இங்க பச்சை பச்சையா இருக்கு' என சிரித்து கொண்டே பார்த்தார், உடனே நான் 'மேடம் ஈஸ்ட் டிரஸ்ட் ஞாபகம் இருக்கா?' என்றதும் (போலியோ முகாமில் எங்கள் நிறுவனம் கலந்து கொண்டு பணியாற்றியது, அப்போது பேசி இருக்கிறோம்) அவரும் அருகில் வந்து 'ஓ! நீங்களா' என்று ஆச்சர்யபட்டு துணிப்பையை எடுத்து பார்த்து வெகுவாக பாராட்டினார்...'உங்களின் இந்த முயற்சி நன்றாக இருக்கிறது' என்றவர் தனக்கும் ஒரு மரக்கன்றை வேண்டும்' என வாங்கி கொண்டார்...உடன் வந்த மாநகராட்சி அதிகாரிகளையும் 'ஆளுக்கு ஒண்ணா வாங்கிகோங்க' என வாங்க வைத்து சந்தோசமாக கிளம்பினார்.



* மாநகராட்சி ஆணையாளர் திரு. மோகன் அவர்கள் விசாரித்து மகிழ்வுடன் மரக்கன்றை பிரபுவிடம் இருந்து பெற்று கொண்டார்.



* ஒரு பாட்டி பிரபுவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார், இப்படி கேட்கிறாரே இவர் எங்க வாங்க போறார் என நினைத்தேன், திரும்பி பார்த்தா அவரை சுற்றி நிறைய பேர், அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒரு கன்றாக கொடுக்க சொல்லி அசத்திட்டார். பிரபுவுக்கு தான் பாட்டி அங்கிருந்து கிளம்பியது பிடிக்கவில்லை.



* நாகர்கோவிலை சேர்ந்த திரு.கதிரேசன் என்பவர் "விரைவில் தனது வீட்டில் ஒரு திருமணம் நடைபெற இருக்கிறது,அங்கேயும் இதுபோல் மரக்கன்றுகளை வழங்கவேண்டும் என விரும்புகிறேன்,ஏற்பாடு செய்து தருவீர்களா" என்றார். எதிர்பார்த்த ஒன்று கண்முன் காட்சியாகி நின்ற சந்தோசத்தில் ஒரு கணம் அப்படியே சிலையாகி விட்டேன். பிரபுவின் முகத்திலோ பெருமித புன்னகை !! பரஸ்பரம் செல்பேசி எண்களை பரிமாறிகொண்டேன்...

* மாலை நடந்த ரிசப்ஷனிலும் தொடர்ந்து கன்றுகளை வழங்கினோம்...அப்போது வந்திருந்த பதிவர் நண்பர் துபாய்ராஜா மிக ஆர்வமாக 15 கன்றுகளை வாங்கிகொண்டார். (மறுநாள் காலையில் பிரபுவிற்கு போன் செய்து கன்றுகளை நட்டுவிட்டேன் என மகிழ்வுடன் கூறினார்) இரு மாதங்கழித்து கன்றுகளின் வளர்ச்சியை போட்டோ எடுத்து அனுப்பு வதாகவும் கூறினார். அவரது ஆர்வத்திற்கு என் நன்றிகள்.

* யானைக்குட்டி ஞானேந்திரன் தான் வாங்கி சென்ற கன்றுக்கு 'பவி' என பெயரிட்டு நட்டதாக மகிழ்வுடன் தெரிவித்தார்.

*  மாலை வந்த பசுமை விடியலின் உறுப்பினர் பதிவர் கூடல் பாலா அவர்கள் , திருமண வரவேற்பு முடியும் வரை கூட இருந்து மரக்கன்றுகளை வழங்கினார்.

எந்த ஒரு செயலும் பலரால் அங்கீகரிக்க பட்டால் அதன் மகிழ்ச்சியே தனிதான்...அத்தகையதொரு மனநிலையில் நாங்கள் இருக்கிறோம்.  

வேலையில் மும்முரமாக இருந்த போது 'ஆன்டி நான்  வந்திருக்கிறேன்' என ஒரு இனிய குரல்...அட 'உலகச் சாதனை சிறுமி' சுட்டிப் பெண் விசாலினி ஆசையுடன் அவளை வேகமாய் இழுத்து கட்டிக் கொண்டேன். அவளோட அம்மா சந்தோசமா 'இப்ப மேலும் இரண்டு கோர்ஸ் முடிச்சிட்டாள்' என்றார்...! மேலும் இரண்டு சாதனைகள் !! அவங்க சொல்ல சொல்ல ஆச்சர்யபட்டுகொண்டே இருந்தேன்...(இன்னும் பல சிறப்பு தகவல்கள் கூறினார்கள் அதை இப்போது சொல்ல அனுமதி இல்லை, மற்றொரு சமயத்தில் தெரிவிக்கிறேன்)

நல்லவை நடந்தேறியது நன்றாகவே...

முதல் முறையாக செய்ய போகிறோம், சங்கரலிங்கம் அண்ணனின் உறவுகள் நண்பர்கள் , அதிகாரிகள் என பெரிய மனிதர்கள் பலர் வரக்கூடிய விழா, தவறாக ஏதும் நிகழ்ந்துவிட கூடாதே என உள்ளுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடித்து கொண்டே இருந்தது, அதனால் தானோ என்னவோ வந்திருந்த பதிவுலக உறவுகளிடம் கூட நன்றாக பேச முடியவில்லை...

இணையம் கொடுத்த ஒரு நல்ல சகோதரன் பிரபு , இரண்டு நாளாக கூடவே சுறுசுறுப்பாக இயங்கினான்...அவனது ஒத்துழைப்பு இல்லையென்றால் என்னால் இந்த அளவிற்கு நன்றாக நடத்தி இருக்க முடியாது...அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

வாழ்நாளில் சிறப்பான  ஓர் நாள்  !!

சமுதாயத்தின் மேல் எல்லோருக்கும் அக்கறை இருந்தாலும் ஒரு சிலருக்கே சமூக பணி ஆற்ற சந்தர்ப்பம் அமைகிறது...அப்படி எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ளாவிட்டால் நான் வாழும் நாட்கள் அர்த்தமில்லாதவை...இந்த மனநிறைவான நிகழ்வும் என் ஒருத்தியால் மட்டும் நடந்துவிடவில்லை...எத்தனை பேர் பங்கு பெற்று இருக்கிறார்கள் என்று எண்ணிக்கையில் அளவிட முடியாது...அவர்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் சொல்லி முடித்துவிட மனம் ஒப்புக்கொள்ளவில்லை, தொடர்ந்து அத்தகையவர்கள் வாழும் இந்த சமூகத்திற்கு தொடர்ந்து சேவை புரிவதே  அவர்களுக்கு நான் சொல்லும் நன்றியாக இருக்கும்...!

திங்கள் அன்று (30/4/2012) திருநெல்வேலியில் இருக்கும் 'ஸ்ரீ ரமணா பாலிடெக்னிக் கல்லூரி' யில் பசுமைவிடியல் சார்பில் 160 மரகன்றுகள் வழங்கப்பட்டது. என்னுடன் பெங்களூரில் இருந்து வந்திருந்த Miss.சில்வியா (Project Executive,Pasumai Vidiyal) மற்றும் அவரின் பெற்றோர் சகிதம் சென்றோம். நல்லமுறையில் கல்லூரியின் நிறுவனர் எங்களை மகிழ்வுடன் வரவேற்று உபசரித்தார், அங்கிருக்கும் ஊழியர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன.



உங்களின் வாழ்த்துக்கள் ஆசியையும் எங்களுடன் இருக்கிறது என முழுமையாக நம்புகிறேன்...அவை எங்கள் குழுவை வழி நடத்தும் இன்றும், என்றும், எந்நாளும்...
                                                                    
மீண்டும் சந்திக்கிறேன்...

பிரியங்களுடன்
கௌசல்யா. 


Tweet

26 கருத்துகள்:

  1. பசுமை விடியலின் பணி மென்மேலும் தழைத்தோங்க அடியேனின் ஆதரவும் வாழ்த்துக்களும் என்றும் உண்டு....

    பதிலளிநீக்கு
  2. ஆபீசர் வீட்டு கல்யாணத்தில் ரிசப்ஷனில் நின்று பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன்...

    பதிலளிநீக்கு
  3. நான் வாங்கி சென்ற மூன்று கன்றுகளும் நலமாக உள்ளன ...

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான பணி செய்துள்ளீர்கள்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப நல்ல, இப்பத்திய சூழலில் பூமிக்குத்தேவையான பணியைச் செஞ்சுருக்கீங்க.. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு நல்ல செயலை
    நேர்த்தியாக சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள் கௌசல்யா.
    மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. இந்த மண்ணுக்கு மிக சிறந்த சேவை செய்து வருகிறிர்கள் தொடரட்டும் உங்க்கள் பணி வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  8. பசுமை புரட்சி உண்மையிலே.......பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  9. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ..!

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப நல்ல விசயம். மனதுக்கும் சந்தோசமாக உள்ளது. வாங்கிச்சென்றவர்கள் அதனை முறையாகப் பராமரித்து வளர்த்தால் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கள்..இன்னும் பசுமை விடியல்...பிரகாசாமாய்...ஜொலிக்க

    பதிலளிநீக்கு
  12. பசுமை பூமி மலர தாங்கள் ஆற்றும் பணிக்கு, என்னால் சிறு தளம் அமைத்து கொடுக்க வரமளித்த, இறைவனுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மரம் வளர்ப்போம்....

    மரம் வளர்க்க, நீங்களும், பசுமை விடியல் இயக்கமும் செய்து வரும் நற்காரியங்கள் மேலும் மேலும் பெருக நல்வாழ்த்துகள் கௌசல்யா.

    பதிலளிநீக்கு
  14. பசுமை விடியலின் இந்த பணி தொடர வாழ்த்துக்கள்.பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  15. ஞானப்பழ மரக்கன்றை ஜோல்னா பையில் மறைத்து எஸ்கேப் ஆகிய நாஞ்சில் மனோவிற்கு போலீஸ் வலை வீச்சு!!

    பதிலளிநீக்கு
  16. உங்களின் இந்த சீரிய முயற்சிக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும் ..

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்கள். நல்லது நடக்க, முதலில் நல்லதை நினைப்போம்.

    பதிலளிநீக்கு
  18. உலகில் இறைவன் எல்லோரையும் படைக்கிறார் ஆனால் எல்லோரும் சரித்திரம் படைப்பதில்லை ஒரு சிலரைத்தவிர....... அதில் நீங்களும் இடம்பெற வாழ்த்துக்கள்.... அந்த சரித்திர நாயகி விசாலியும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. நல்ல நோக்கம்....சிறந்த தொடக்கம். தொட்டதெல்லாம் பசுமையாக வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  20. பசுமை விடியலின் பணி தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. சிறப்பான பணி. மேலும் சிறக்க வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  22. நல்ல பணி. தொடருங்கள்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. திருமண விழாவில் பசுமை விடியல்...

    !வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...