திங்கள், டிசம்பர் 5

AM 11:59
32

இவர்கள் ?!

நம் சமூகத்தில் தான் இவர்களும் இருக்கிறார்கள், நமக்கு தெரிந்தவர்கள் தான்...நம்மை சேர்ந்தவர்கள் தான், ஆனால் வேண்டாதவர்கள் போல தனித்தே பார்க்கபடுகிறார்கள். இவர்களின் பெயர் ஊனமுற்றவர்கள் ! தோற்றத்தில் முழு மனிதனாக காட்சியளித்தும் மனதில் ஊனமுடன் அலைகிறார்கள் பலர்...! ஒருத்தரை எந்த விதத்தில் எல்லாம் காயப்படுத்தலாம், வார்த்தையால் எப்படி சிதைக்கலாம், வதைக்கலாம் என்ற எண்ணத்துடன் உலவும் மனிதர்கள், நெருங்கிய நட்பிடம் கூட துரோகம் இழைக்கும்  குறுகிய புத்தி கொண்ட மனிதர்கள், இவர்களே உண்மையில் ஊனமுற்றவர்கள் !!

'ஊனமுற்றவர்கள்' என்று பெயரில் கூட ஊனம் இருக்கக்கூடாது என 'மாற்றுத் திறனாளிகள்' என்று பெயரை மாற்றினார்கள்...ஆனால் பெயரை மாற்றினால் மட்டும் போதுமா...இவர்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டாமா...?! அதற்காக அரசோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ என்னவெல்லாம் செய்கின்றன, அவை உண்மையில் இவர்களுக்கு பயன் கொடுக்கிறதா என்பதை பற்றி நாம் யோசித்திருக்கிறோமா ?! 

ஒரே டிக், 'ஓஹோ'ன்னு வாழ்க்கை... சாத்தியமா ?!

இதில் அதிகம் யோசிக்க என்ன இருக்கிறது, அதுதான் எந்த ஒரு வேலைக்கான விண்ணப்பத்திலும் இவர்களுக்கு என்று ஒரு கட்டம் ஒதுக்க பட்டு இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? 'அதில் பேனாவால் ஒரு டிக் செய்து விட்டால் போதும் இவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் கிடைத்துவிடும்' என்று உங்களை போலத்தான் நானும் நினைத்துகொண்டிருந்தேன்...ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கிறதே !

சிறப்பு சலுகைகள் முன்னுரிமைகள் என்பது எல்லாம் சிரமபடாமல் உடனே கிடைத்து விடுவதில்லை...இதில் நிறைய முரண்பாடுகள், வேறுபாடுகள் , வேதனைகள் இருக்கின்றன... சலுகை பெற வேண்டி அரசு அலுவலக வாசலில் காத்து கிடக்கும்(?) இவர்களை போன்ற ஒவ்வொருவரிடமும் ஓராயிரம் வேதனை சம்பவங்கள் இருக்கின்றன...


சமீபத்தில் இளைஞன் ஒருவனிடம் பேசிகொண்டிருந்த போது,' சே...நல்லா படிச்சும் வேலைக்கு நாயா அலையறத பார்க்கும் போது ஒரு மாற்றுத்திறனாளியாக பிறந்திருக்கலாம்(?), அவங்களுக்கு தான் எவ்வளவு சலுகைகள்...எங்கே போனாலும் முன்னுரிமைதான். ம்...கொடுத்து வச்சவங்க' என்றார். நானும் வந்த கோபத்தை காட்டிக்கொள்ளாமல், 'அப்ப ஒன்னு பண்ணுங்க, ஒரு காலை வெட்டிகோங்க, உடனே அரசு வேலை கிடைச்சிடும்' என்றேன் மெதுவாக. 'ஐயோ அது எப்படி முடியும், ஒரு காலை வச்சி எப்படி நடக்க, சிரமமா இருக்குமே' என சொல்ல 'இதுதான், இந்த வலி,சிரமத்திற்கு  தான் சலுகைகள் கொடுக்கபடுகிறது, ஒரு பத்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு நடந்து பாருங்க, அப்ப புரியும் கண் தெரியாதோரின் வேதனை!?' என சொல்லி அப்போதைக்கு அப்பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தேன். ஆனால் யோசித்துப்பார்க்கும் போது,

இவரை போன்றுதான் நம்மில் பலரும் இருக்கிறோம்.

தவிரவும் இந்த வலிக்கு தான் அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சலுகைகள், உதவிகள் செய்கின்றனவா...?!

உதவி என்பது எதற்காக...?!

உதவி என்பது சம்பந்தப்பட்டவர்களின் மனம், உடல் வலியை குறைப்பதற்காக, நீக்குவதற்காக, ஆறுதல் அளிப்பதற்காக, அவர்களின் கண்ணீரை முழுதாக துடைப்பதற்காக இருக்கவேண்டும். மாறாக இத்தனை பேருக்கு இத்தனை எண்ணிக்கையில், இவற்றை கொடுத்தோம் என்று கணக்கு காட்டுவதற்காக, பெருமைப்பட்டு கொள்வதற்காக என்பதை போல இருக்ககூடாது...

முன்னுரிமை என்று போட்டிருக்கும் வேலை வாய்ப்புகளை  பொறுத்தவரை போனதும் அப்படியே வேலையை தூக்கி கையில் கொடுத்துவிட மாட்டார்கள் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்ல இவர்கள் எடுக்கும் பிரயாசங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வலிகள் கொடுக்க கூடியவை, ரத்த கண்ணீரை வரவழைப்பவை.

நமது அரசு செய்வனவற்றில் சில...

* இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 41 மற்றும் 46 ஆவது பிரிவுகள் ஊனமுற்ற சமூதாயத்தின் நிலையை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றன. 

* குரூப் சி, குரூப் டி தேர்வுகளில் 3  சதவீதம் வாய்ப்பு.

* வயது வரம்பில் பத்து ஆண்டுகள் சலுகை.      

* மத்திய பெட்ரோலிய அமைச்சகம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின்  டீலர்ஷிப்பு ஏஜென்சிகளில் 15 சதவீதம்.   

* சுய தொழில் செய்வதற்கு 6,500 வரை எந்த பிணையும் இல்லாமல் 4 % வட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனுதவி.

* செயற்கை உறுப்புகள் இலவசமாக.

* பேருந்து, ரயில்களில் பயணம் செய்ய சலுகை.

இவை எல்லாம் முறைப்படி கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு அடையாள அட்டை வேண்டும்.

அடையாள அட்டை

ஒவ்வொரு மாவட்ட மறுவாழ்வு மையங்களும் இதனை வழங்குகின்றன. இருப்பினும் இன்னும் இந்த அடையாள அட்டை சரி வர கிடைக்க பெறாமல் அவதி படுபவர்கள் பலர். இந்த அட்டையை வெகு சுலபமாக வாங்கி விட முடியாது...பல சான்றிதல்களை ஆதாரமாக காண்பிக்க வேண்டும். அந்த சான்றிதல்கள் வாங்க முதலில் நடையா நடக்கணும்...!!? அரசு கேட்கும் ஒரு சில ஆவணங்கள் இல்லை என்று பல முறை இவர்கள் திருப்பி அனுப்ப படுகின்றனர். இங்கே இந்த சான்றிதல், அங்கே அந்த சான்றிதல் வாங்கி வா என அலைகழிக்க படுகின்றனர்...சாதாரணமான மக்களுக்கு இதை போன்ற நிலை என்றால் கூட ஓரளவிற்கு பொறுத்து கொள்ளலாம், ஆனால் வலியுடன் இருக்கும் இவர்களை அலைகழிப்பது எந்த விதத்தில் நியாயம்...?!



அடையாள அட்டை வேண்டும் என்று விண்ணப்பிக்க இரு கால்களையும் பாதிக்கு மேல இழந்து தவழ்ந்து வரும் ஒருவரிடம், 'நீ போய் நடக்க இயலாதவன் என்று மருத்துவரிடம் சான்றிதல் வாங்கிவா' என்று திருப்பி அனுப்பி வைக்க படுகிறார் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்...அவர் வரும் கோலத்தை பார்த்தாலே தெரியும், நடக்க இயலாதவர் என்று, இதை நிரூபிக்க அவர் இப்படியே தவழ்ந்து சென்று மருத்துவரை பார்த்து சான்றிதல் வாங்க வேண்டுமா...!!?

இதற்காக ஒரு மருத்துவரை அங்கேயே நியமிக்கலாம் அல்லது மாற்றுதிறனாளிகள் இருக்கும் இடத்திற்கு(வீட்டிற்கு) அரசு பணியாளர் ஒருவர் சென்று இதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்கலாம்...சம்பந்தப்பட்டவர்கள் இதை பற்றி யோசிக்கலாமே...!!


இதை பற்றி நண்பர் ஒருவருடன் பேசிகொண்டிருந்த போது 'ஏன் இவர்களுக்கு நாம் உதவ கூடாது' என்று தோணியது...உடனே இதை குறித்து நெல்லையில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது...

"நீங்கள் கேட்கும் ஒவ்வொருவர் பற்றிய அனைத்து விவரங்களையும் எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் நான் சேகரித்து கொண்டு வந்து தருவதின் மூலம் மாற்றுதிறனாளிகள் அலைச்சல் குறையுமே, எனக்கு இதற்க்கு நீங்கள் அனுமதிப்பீர்களா" என்று வினவினேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் "நாங்களே பார்த்து கொள்கிறோம், மிக்க நன்றி...!" என்பதுதான்.

செயற்கை உறுப்புகள்

அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மாற்றுத்திரனாளிகளுக்கு செயற்கை கை கால்களை வழங்கி வருகிறார்கள், இது தான் நமக்கு தெரியும், இதன் பின்னால் உண்மையில் இருப்பது வலி மட்டுமே. ஆம் இவர்களுக்கு கொடுக்ககூடியது  கனம் கூடியதாகவும், உடலுடன் இணைக்கும் இடத்தில் வலி தருவதாகவும் இருக்கிறது. சமயங்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு புண்ணாகி விட கூடும். சுலபத்தில் அசைக்கவும் இயலாது. இதன் விலை நாலாயிரம். ஆனால் இலகு ரகத்தில் செய்யப்படும்  காலிபர் செயற்கை உறுப்புகள் மெல்லியதாக கனம் இன்றி அணிந்திருப்பதே தெரியாத அளவிற்கு இருக்கும். ஆனால் விலை அதிகம்.

வலியை அதிகரிக்ககூடிய ஒன்றை அதிக எண்ணிக்கையில் கொடுப்பதை விட இலகு ரக காலிபர் உறுப்புகளை சிலருக்கு கொடுத்தாலும் வாழ்வின் இறுதி வரை நிம்மதியாக வாழ்வார்கள். கவனிக்குமா அரசும் பிற தொண்டு நிறுவனங்களும்...?!!

அரசே தயாரித்து இலவசமாக அல்லது சலுகை விலையில் இதனை வழங்கலாம்...மாற்றுத்திரனாளிகளுக்கு மிக உபயோகமாக இருக்கும். நமது இன்றைய அரசு தாயுள்ளத்துடன் இந்த உதவியை செய்தால் இவர்களின் வாழ்விலும் வெளிச்சம் கிடைக்கும், இவர்களின் வெள்ளை உள்ளம் வாழ்த்தும்...! அவர்களும் வாழ்வார்கள்...!

கேள்வி பட்டேனுங்க...!

ஒரு பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனம் சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்களை வழங்கியது.

பிரமாதமாய் போஸ் கொடுத்து போட்டோ எடுத்தாங்க...! அங்கே கொடுக்கப்பட்டது கனம் கூடிய சாதாரண உறுப்புகள் !! 250 பேருக்கு செயற்கை உறுப்புகள் கொடுத்தால் ஆறு பாய்ண்ட்ஸ் கிடைக்குமாம் அது கிடைச்சாத்தான் குறிப்பிட்ட அந்த உயர் பதவிக்கு போக முடியுமாம். 'அதனால் எனக்கு எண்ணிக்கை தான் முக்கியம், அதிக விலையில் கொஞ்ச பேருக்கு கொடுப்பதைவிட (குறைந்த விலையில்) அதிக பேருக்கு கொடுத்ததாக கணக்கு காட்டுவது தான் எனக்கு நல்லது' என்றாராம் அந்த பொது நல தொண்டர் (?!)

சேவை என்பது தங்களின் அந்தஸ்து உயரும், வசதி பெருகும், புகழ் கிடைக்கும் என்ற சுயநலத்துக்காக என்றால் என்ன மனிதர்கள் இவர்கள்...?!

என்னவெல்லாம் செய்யலாம்... 

மொத்த மக்கள் தொகையில் இவர்களின் எண்ணிக்கை 10 கோடி !! தமிழ்நாட்டில் 2 இலட்சம் பேர் இருக்கிறார்கள்...!! 

இத்தனை பேருக்கு இந்தியா முழுவதும் வெறும் 25 அலுவலங்கள், 18 தொழிற்பயிற்சி மறுவாழ்வு மையங்கள் இருக்கின்றன, இவை மட்டும் போதாது...இந்த அமைப்புகள் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வாழ்பவர்க்கே அதிகம் பயன்படுகிறது...உதவிக்காக காத்திருப்பவர்கள் கிராமப்புறங்களில் தான் அதிகம் இருக்கிறார்கள்...அனைத்து உதவிகளும் அவர்களுக்கும் போய் சேர வேண்டும். 

* முதலில் இவர்களை பரிதாபமாக பார்ப்பதை நாம் நிறுத்தவேண்டும். அவர்களுக்கு தேவை நமது பரிதாபமோ கண்ணீரோ அல்ல, அவர்களின் தோளை  தட்டி கொடுக்க கூடிய ஒரு கரம் !

* அவர்கள் இழப்பினை நம்மால் ஈடு செய்ய முடியாது ஆனால் எதனை இழந்தவர்கள் என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் போல் மட்டும் வேலை வாய்ப்பினை கொடுக்கலாம். 

* இவர்களுக்கு தேவை இலவசம் அல்ல !அரசு இவர்களை கவனித்துக்கொள்ளும் என்று எண்ணாமல் சுய தொழில் செய்பவர்கள் மற்றும் பிற அனைத்து நிறுவனங்களும் இவர்களை (தகுந்த)வேலையில் அமர்த்தலாம்.

* நாம் கண் தானம் செய்வதின் மூலம் பார்வை இழந்தவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றலாம். இறந்த பின்னும் நம் கண்கள் பார்க்குமே, இவர்களின் மூலம்...!

இவர்களும் நம்மவர்களே !!


மாற்றுத்திறனாளிகளிடம் ஏராளமான திறமைகள் இருக்கின்றன. செயலாற்றும் புத்திசாலித்தனம் அதிகம் உடையவர்கள்., அனைத்தையும் விட உடல்  குறைவற்ற நம்மை விட அதிக தன்னம்பிக்கை உடையவர்கள்... உடனே எதற்கும் சோர்ந்து போகாமல் நேர்மையாக சிந்தித்து செயலாற்ற கூடியவர்கள். இவர்களின் உழைக்கும் திறனுக்கு முன் நாமெல்லாம் மிக சாதாரணம்.  அவர்களால் எதை செய்ய முடியுமோ அந்த வேலையை அவர்களிடம் கொடுத்தால் விரைந்து செயலாற்றி முடிப்பார்கள். இவர்களை நம்மை விட்டு தனியே பிரித்து பார்க்காமல் நம் தோளோடு தோள் சேர்த்து அவர்களின் கை கோர்த்து நடக்க வேண்டும். அப்போதுதான் நம்மிடையே இருக்கும் கர்வம்,சுயநலம், தன்னிரக்கம், துரோக சிந்தனை போன்ற அழுக்குகள் கழுவப்படும்.

நம் போன்றோர் செருப்பு போட்டு கொண்டு போகும் 'பொது கழிப்பறை' போன்ற இடங்களுக்கு இவர்களை போன்ற ஒரு சிலர் தவழ்ந்து போவதை பார்க்கும் போது வேதனை படாமல் இருக்க இயலவில்லை...

உடலில் தான் குறை ஆனால் உணர்வுகள் எல்லாம் நம்மை போன்றது தானே...அசிங்கத்தை பார்த்தால் நமக்கு ஏற்படும் அசுயை எண்ணங்கள் அவர்களுக்கும் உண்டு தானே, அதையும் சகித்துக்கொண்டு வாழும் இவர்கள் மேல் நாம் எல்லோரும் அக்கறை எடுக்கலாமே, மாறாக இவர்களை ஒதுக்கி வைப்பது, மரியாதை குறைவாக நடத்துவது, அசட்டை செய்வது போன்றவை கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும்.

கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று அரசு இவர்களுக்காக சிலவற்றை அறிவித்தது, வெறும் அறிவிப்புடன் நின்று விடாமல் உடனே செயலில் நடத்தி காட்ட வேண்டும்...! எது ஒன்றும் இவர்களின் வலியை குறைப்பதாக இருக்க வேண்டுமே தவிர வலியை அதிகரிப்பதாக இருக்ககூடாது என்பதே எனது வேண்டுகோள் !!


பிரியங்களுடன்
கௌசல்யா 



படங்கள் -நன்றி கூகுள் 

Tweet

32 கருத்துகள்:

  1. மிக அவசியமான பகிர்வு. சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. மனதில் ஈரத்துடன் எழுதியிருக்கீங்க. படிச்சதும் மனம் கனத்ததுங்க. மாற்றுத் திறனாளிகளுக்குப் பின்னால இத்தனை வேதனைகள் இருப்பதை இப்ப தானுங்க தெரிஞ்சுக்கிட்டேன். அதுலயும் தொண்டு நிறுவனங்கள் செய்யற சேவைலகூட உள்நோக்கம் இருப்பதெல்லாம் நினச்சுக்கூட பாக்க முடியலிங்க... படிச்சதும் அணில் மாதிரி என்னாலான உதவிகள இவங்களுக்குச் செய்யணும்னு உறுதி எடுத்துக்கிட்டேனுங்க... நன்றிங்க...

    பதிலளிநீக்கு
  3. மிகவும் நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு.

    பதிலளிநீக்கு
  4. பதிவுலகில் ஒரு புரட்சி...

    தெரிந்துக் கொள்ள இந்த பதிவை வாசியுங்கள்..

    http://ungaveetupillai.blogspot.com/2011/12/blog-post.html

    பதிலளிநீக்கு
  5. பேருந்து, ரயில்களில் பயணம் செய்ய சலுகை.//

    ரயில் நிலையத்தில் நான்காம் நம்பர் பிளாட்பாரம் செல்ல, கால் ஊனம்மற்றவர்களுக்கென தனி பாதையும் அமைக்க வேண்டும்...!!!

    பதிலளிநீக்கு
  6. உண்மையை உணர்த்தியுள்ளீர்கள் அக்கா................

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு.
    எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. அவர்களின் கஷ்டங்களை நன்கு உணர்ந்தவன்... அனைவருக்கும் கல்வித்திட்டம் மூலம் முடிந்தவரை உதவிகள் செய்கிறார்கள். ஆனால் பல தொண்டு நிறுவனங்கள் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன. இந்த எண்ணம் மாற வேண்டும். வெளிநாடுகளில் உள்ளது போல் ஷாப்பிங் மால்களில் சாய்தள வசதி செய்யலாம். அவர்களுக்குப் பயன்படும் வகையில் பொதுகழிப்பிட வசதி செய்யலாம். பேருந்தில் அவர்கள் ஏறுவதற்கேற்ப வசதிகள் செய்யலாம். அரசாங்கம் இவர்களையும் மதித்து உதவினால் மனிதம் வளரும். உங்கள் பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நினைப்பதை நீங்க செயல்படுத்த நினைப்பதே உங்களோட ப்ளஸ்பாயிண்ட்.பாராட்டுக்கள்.
    மிக நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. மாற்றுத் திறனாளி
    மனகுறை நீரெடுத்துப்
    போற்றும் வகைதனிலே
    புரியும் நிலைதனிலே
    ஆற்றுப் படுத்தியுள்ளீர்
    அரசும் செவிமடித்து
    ஏற்றுச் செயல்படுமா
    எதிர்காலம் காட்டுமதை!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. பதிவு முழுதுமே அருமை .எதை மேற்கோள் காட்டுவது என்று திகைச்சு போய் விட்டேன் தோழி .அருமையாக எழுதி இருக்கிறீர்கள் .

    //எது ஒன்றும் இவர்களின் வலியை குறைப்பதாக இருக்க வேண்டுமே தவிர வலியை அதிகரிப்பதாக இருக்ககூடாது என்பதே எனது வேண்டுகோள் !!//



    சரியாக சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
  12. நல்ல பகிர்தல்!! சில பேரோட வலி நிறைய பேருக்கு புரியறதில்லையோ?

    பதிலளிநீக்கு
  13. நல்ல பதிவு
    வாழ்த்துக்கள். ... please read my blog www.rishvan.com

    பதிலளிநீக்கு
  14. //நம் போன்றோர் செருப்பு போட்டு கொண்டு போகும் 'பொது கழிப்பறை' போன்ற இடங்களுக்கு இவர்களை போன்ற ஒரு சிலர் தவழ்ந்து போவதை பார்க்கும் போது வேதனை படாமல் இருக்க இயலவில்லை...//

    சிறந்ததொரு கட்டுரை.

    குறைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், அதற்கான தீர்வுகளையும் குறிப்பிட்டிருப்பது அருமை.

    சமூகத்தை பேணும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. @@ ராமலக்ஷ்மி...

    நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு
  16. @@ கணேஷ் said...

    //படிச்சதும் அணில் மாதிரி என்னாலான உதவிகள இவங்களுக்குச் செய்யணும்னு உறுதி எடுத்துக்கிட்டேனுங்க...//

    உங்களின் உறுதி என்னை நெகிழ்ச்சி அடைய செய்கிறது. அரசு உதவி செய்யும் என்று எண்ணாமல் நம்மால் முயன்ற உதவிகளை செய்யலாம்...

    நன்றிகள் கணேஷ்.

    பதிலளிநீக்கு
  17. @@ அம்பலத்தார்...

    நன்றிங்க.



    @@ பாட்டுரசிகன்...

    முதல் வருகைக்கு நன்றிகள்.



    @@ தமிழ்வாசி பிரகாஷ்...

    நன்றி பிரகாஷ்


    @@ நண்டு @நொரண்டு -ஈரோடு...

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  18. @@ MANO நாஞ்சில் மனோ said...

    //ரயில் நிலையத்தில் நான்காம் நம்பர் பிளாட்பாரம் செல்ல, கால் ஊனம்மற்றவர்களுக்கென தனி பாதையும் அமைக்க வேண்டும்...!!!//

    அவசியம் அமைக்கவேண்டும்...இது போன்ற இன்னும் நிறைய செய்யவேண்டியது இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிசெய்தால் நன்றாக இருக்கும்.

    கருதிட்டமைக்கு நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  19. @@ Rathnavel...

    முக நூலில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  20. @@ விச்சு said...

    //ஆனால் பல தொண்டு நிறுவனங்கள் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன. இந்த எண்ணம் மாற வேண்டும்.//

    நல் மனதுடன் உதவி செய்கிறவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்...ஆனால் இத்தகைய தொண்டையும் வியாபாரமாக சிலர் பார்கிறார்கள், மனிதம் மறந்து !!

    //வெளிநாடுகளில் உள்ளது போல் ஷாப்பிங் மால்களில் சாய்தள வசதி செய்யலாம். அவர்களுக்குப் பயன்படும் வகையில் பொதுகழிப்பிட வசதி செய்யலாம். பேருந்தில் அவர்கள் ஏறுவதற்கேற்ப வசதிகள் செய்யலாம்.//

    நிச்சயமாக. செய்ய வேண்டுமே...!?

    மாற்றுதிரனாளிகளின் வலி உணர்ந்து அதை இங்கே கருத்திடமைக்கு என் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  21. @@ முனைவர்.இரா.குணசீலன்...

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  22. @@ புலவர் சா இராமாநுசம் said...

    சில கவி வரிகளில் பதிவின் மொத்த பொருளையும் புரியவைத்து விட்டீர்கள்.

    மிக்க நன்றிகள் அப்பா.

    பதிலளிநீக்கு
  23. @@ angelin...

    நன்றி தோழி.



    @@ தெய்வசுகந்தி...

    உணர்விற்கு நன்றி தோழி.



    @@ rishvan...

    வருகைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  24. @@ சத்ரியன் said:

    //சமூகத்தை பேணும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.//

    நிச்சயமாக இருக்கிறது...

    கருத்திடமைக்கு மிக்க நன்றிகள் சத்ரியன்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...