Friday, November 4

9:55 AM
25

கூட்டு குடும்பமா அப்படினா ? என்று புருவத்தை உயர்த்த வேண்டியதாக இருக்கிறது இப்போது...!?'இளைப்பாறும் சோலைவனம்' போன்ற கூட்டுகுடும்பத்தில் நான் வசித்து வந்த காலம் என்னால் என்றும் மறக்க இயலாத ஒன்று. திருமணத்தின் போது பெரிய குடும்பத்தில் குடுக்குறோம், போன வேகத்தில சூட்கேசை தூக்கிட்டு வர போறா என்கிற பயம் என் அம்மாவுக்கு அதிகம் (தன் பொண்ணு மேல அவ்வளவு நம்பிக்கை !) ஆனா எனக்கு பெரிசா வித்தியாசம் எதுவும் தெரியல, இன்னும் சொல்ல போனால் ரொம்ப ஜாலியா இருந்தேன். எங்க அம்மாவுக்கே ஒரு கட்டத்தில் சந்தேகம் வந்துவிட்டது, எப்படி நம்ம பொண்ணு இப்படி இருக்கிறாள் என்று...! அந்த அளவிற்கு கூட்டுகுடும்பம் எனக்கு பிடித்துவிட்டது. உதாரணத்துக்கு  இரண்டு விஷயம் மட்டும் சொல்றேன்...படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க.

குடும்பத்து உறுப்பினர்கள் மொத்தம் எத்தனை பேர் ? யார், யாருக்கு என்ன உறவு? என்ன பேரு ? இது புரியவதற்க்குள் ஒரு மாதம் ஓடிவிட்டது ! இதில் இருவர் உருவம் வேறு ஒரே மாதிரி இருக்கும், இவருன்னு அவரையும் அவருன்னு இவரையும் கூப்பிட்டு அந்த காமெடி/குழப்பம் வேற ! மாமனார், மாமியார் இருவரையும் சேர்த்து ஐந்து குடும்பங்கள் ஒரு வீட்டுக்குள்...! பதினாறு உறுப்பினர்கள் ! நாலு தனி தனி வீடுகள் சேர்ந்து ஒரு பெரிய வீடு, ஒரே தலை வாசல். எதிர்காலத்தில் தனி வீடாக பிரிக்க வேண்டும் என்றால் அதிக சிரமபடாமல் பிரித்துகொள்ளும் அளவில் அறைகள், கதவுகள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. (எல்லாம் எங்க மாமனார் பிளான் !!) 

ஒரு அறையில் சமையல் நடக்கும்...என் கணவரின் மூன்று அண்ணன்கள் அவங்க அவங்க குடும்பத்துடன் வந்து உணவருந்தி விட்டு செல்லும் விதம் பார்க்க ஜோரா இருக்கும். மூன்று அக்காக்களும் சமையலை ஆளுக்கு ஒரு வேலையாக பிரித்து பார்த்துப்பாங்க. நான் கடைக்குட்டி(!) மருமகள் என்பதால் வீட்டில் எந்த பெரிய பொறுப்பான வேலையும் கிடையாது...எங்கள் பாக்டரியை விசிட் செய்யும் வேலை மட்டும்தான்.      

என் கணவர் மற்றும் அவரது அண்ணன்களுக்கு நான் மருமகள் முறை என்பதால் என்னிடம் எப்பவும் ஒரே கிண்டலும் கேலியுமாக இருப்பார்கள்.மாமியார் எனக்கு பாட்டி முறை , அதனால் மாமியார் என்கிற பயம் எல்லாம் சுத்தமா கிடையாது. (பயபடுற ஐடியாவும் எனக்கு இல்ல...! நம்ம வளர்ப்பு அப்படி !) ஆனால் மாமனார்(தாத்தா) பக்கத்தில கூட போக மாட்டேன், மரியாதைதான் (அவர் தோற்றம் அப்படி கம்பீரமாக இருக்கும் !) 

இன்னொரு காரணமும் இருக்கு, அதையும் சொல்லிடுறேன்...! ஒருநாள் பாக்டரிக்கு சரக்கு கொண்டு வந்த லாரி டிரைவர் ஒரு துண்டு சீட்டை என்னிடம் கொடுத்தார். நானும் அதை பொறுப்பா பக்கத்தில் இருந்த மாமனாரிடம் கொடுத்தேன் 'நீயே  படி' என்றார், 

'1,200 ரூபாய்  கொடுத்து விடவும் என்று இருக்கு' என்றேன். 

'வேற என்ன போட்டு இருக்கு' என்று அழுத்தி கேட்டார், 

'வேற இல்லையே இது மட்டும் எழுதி கிழே கையெழுத்து போட்டு இருக்கு' என்றேன். 

'அது எப்படி கொண்டா இங்கே' என்றார்.

பார்த்துட்டு "நீ மெட்ராஸ்ல என்னத்த பெரிசா படிச்ச இங்கே 'எதுப்பு'ன்னு போட்டு இருக்கிறது கண் தெரியலையா ?" திட்ட தொடங்கிட்டார். 

எனக்கு ஒன்னும் புரியல...'அப்படினா என்ன'னு கேட்டேன் 

'இது தெரியாதா ? இதுதான் உங்க மெட்ராஸ் படிப்பின் லட்சணம்' அப்படி இப்படின்னு செம ரைடு !! கண்கலங்க விறுவிறுன்னு உள்ளே போய்ட்டேன், ஒரே அழுகை !! அப்புறம் கணவர்கிட்ட அர்த்தம் கேட்டு தெரிஞ்சிகிட்டேன். ஆனாலும் நான் படிச்ச தமிழ்ல இது இல்லையேனு ஒரே பீலிங் ! ( உங்க யாருக்கும் தெரிஞ்சா பின்னூட்டத்தில் சொல்லுங்களேன் !!)

நெகிழ்ச்சியான சந்தர்ப்பங்கள் ! 

நான் கன்சீவ் ஆனபோது மருத்துவர் பழங்கள் சாப்பிட சொன்னாரே என்று என் கணவரை வாங்கி வர சொன்னேன்...சரி என்று கிளம்பி சென்றவர் திரும்பி வந்து பிளாஸ்டிக் கவரை நீட்டினார், நானும் ஆவலாய் வாங்கி பார்த்தா உள்ளே ஒரே ஒரு பழம் இருக்கு...! என்னடா இவ்வளவு கஞ்சமா இருக்கிறாரேனு கோபம் வந்துடுச்சு...நான் கத்தவும்(!) சிரிசிட்டே போய்ட்டார். அப்புறம் ஒரு வாண்டு வந்து நடந்த கதையை விலாவரியா சொல்லிச்சு...

வீட்ல எங்களுக்கு கடைசி அறை கொடுத்திருந்தாங்க...எங்க அறைக்கு வரணும் என்றால் ஒரு பத்து அறைகளை வரிசையா கடந்து வரணும்...இரண்டு கையில் இரண்டு பேக்  நிறைய பழம்  வாங்கி வந்தவர், முதல் அறையில் இருந்த அப்பா அம்மா கிட்ட ஆளுக்கு ஒண்ணா எடுத்து கொடுத்திட்டு, எதிர்ப்படும் ஒவ்வொருத்தருக்கும் எடுத்து கொடுத்துட்டே வந்திருக்கிறார் என்கிட்டே வந்தபோ ஆல்ரெடி பேக் காலி, ஒரு அக்கா தனக்கு கொடுத்ததில் ஒரு பழத்தை போட்டு அனுப்பி இருக்காங்க. எல்லாம் தெரிந்து அடசேன்னு எரிச்சல்...இந்த மாதிரி சூழ்நிலையில் எப்படிடா நம்ம குழந்தை ஆரோக்கியமா வளரபோகுதுன்னு ரொம்ப பெரிய அளவுல கவலைப்பட தொடங்கிட்டேன். 

கொஞ்ச நேரம் கழிச்சு என் ரூம் ஜன்னலுக்கு அந்த பக்கத்தில் அவரோட அண்ணன் மெதுவா கூப்பிட்டார்...அவர் கைல ஒரு பேக் நிறைய ஆப்பிள் !! 'என்ன மாமா இது என்ன' என்றேன், " உனக்குத்தான் வாங்கினேன், தலைவாசல் வழியாக வந்தா உனக்கு வந்து சேராது என்று தெரியும், அதுதான் இப்படி ஜன்னல் பக்கம் வந்தேன், இந்தாமா எடுத்து உள்ள வச்சுக்கோ, அப்ப அப்ப எடுத்து சாப்பிட்டுக்கோ " அப்படியே வாயடைத்து நின்றுவிட்டேன். அதுக்கு அப்புறம் சாயங்காலம் வெளில போயிட்டு வரும்போது எனக்கு ஒரு பேக் தன் பிள்ளைகளுக்கு ஒரு பேக் என வாங்கி வருவது வாடிக்கையாகிவிட்டது...!

என் மாமாக்கள் இப்படி என்றால் எங்க அக்காக்கள் பண்ணிய கலாட்டா வேறு விதம் !!


வீடு பாக்டரி எல்லாம் ஒரே தெருவில் இருக்கிறது . மாமா , அக்கா எல்லோரும் காலையில் வீட்டில் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு அவங்க அவங்க பாக்டரியை கவனிக்க போய்விட வேண்டும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டு இருக்கும். சும்மா இருக்கிறேன் என்று வீட்ல இருந்துவிட இயலாது. (அதனால சீரியல் பார்க்கும் பழக்கமே யாருக்கும் இல்லை !!) 

கர்ப்பமா இருக்கும் பெண்ணுக்கு நல்லது என்று சாம்பார் வைக்கும் போது பருப்பு வெந்ததும் அதில் கொஞ்சம் கிண்ணத்தில் எடுத்து நெய் கலந்து ஷெல்பில் வைத்து மேல ஒரு பெரிய பாத்திரத்தை கவிழ்த்தி மூடி வச்சிடுவாங்க...பாக்டரில நான் இருக்கும் இடம் தேடி வந்து 'கௌசல்யா இந்த ஷெல்பில, இந்த பாத்திரம் அடியில் பருப்பு வச்சிருக்கிறேன், சாப்பிட போகும்போது அதை எடுத்துக்க' என்று ஒரு குரல் கொடுத்துட்டு  போய்டுவாங்க. புதன் , ஞாயிறு இருநாளும் அசைவம் . எல்லோரும் அசைவம் விரும்பி சாப்பிடுவாங்க  சீக்கிரம் காலியாகிவிடும் என்பதால் சமைச்சதும் வழக்கம் போல தனி கறியா எடுத்து எனக்காக வச்சிடுவாங்க. அப்புறம் எனக்கு ஒரு சவுண்ட் !

ஒரு நாள் பாக்டரில ஒரு பிரச்சனை என்று சீரியஸா கவனிச்சிட்டு இருந்தேன், அப்போ பெரிய அக்கா வந்து,'கௌசல்யா மூணாவது செல்பில இந்த பாத்திரம் அடியில சிக்கன் இருக்கு, சாப்டுகோ' என்றார்கள். 'சரிக்கா' என்று சொல்லிட்டு வேலையை தொடர போய்டேன், கொஞ்ச நேரம் கழிச்சு இரண்டாவது அக்கா வந்து 'கௌசல்யா முதல் செல்பில இருக்கு எடுத்து சாப்பிடு' னு சொல்லவும் மூத்த அக்கா வச்சதை இவங்க மாத்தி எடுத்து வச்சிட்டாங்களா என்று ஒரு குழப்பம்...சரி போய் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன், ஒரு கால் மணி நேரம் கழிச்சு சின்ன அக்கா 'கௌசல்யா குக்கருக்கு அடியில இருக்கு, போய் சாப்பிடு டைம் ஆச்சு' னு சொல்லவும் இன்னைக்கு என்ன இது இப்படின்னு 'சரிக்கா நீங்க போங்க நான் போறேன்' சொல்லிட்டு கிளம்பினேன். 

சமையல் அரை பக்கம் நுழையவும் என் மாமியார் சவுண்ட் பெரிசா கேட்டுச்சு...அக்காக்களுக்கு ஒரே திட்டு என்ன சமையல் செய்றாங்க , குழம்பில கறியே இல்ல, கறி பத்தாதுனா கூட வாங்கிட்டு வர சொல்ல வேண்டியதுதானே...?!   (எனக்கு தனியா எடுத்து வைப்பது அவங்களுக்கு தெரியாது...!)  அக்காக்கள் என்மேல இருக்கிற அக்கறையில அன்னைக்கு பார்த்து மூணு பேரும் போட்டி போட்டு எடுத்து வச்சிடாங்க, ஒருத்தர் வச்சதை மத்தவங்க கிட்ட சொல்லல...பகல் நேர வேலை டென்ஷன்ல இதை மறந்துட்டாங்க போல...உள்ளே போய் மூணு கிண்ணமும் எடுத்து ஒண்ணா சேர்த்தா அரைகிலோவுக்கு மேல இருக்கு...!! 

அன்னைக்கு பார்த்து பசியோட லேட்டா சாப்பிட வந்த மாமியாருக்கு ,கொஞ்சமா இருந்த வெறும் குழம்பை பார்த்து கோபம் வராம சிரிப்பா வரும் !!?

நைட் மாமனார், மாமியார் தூங்கிய பிறகு வழக்கம் போல முற்றத்தில உட்கார்ந்து பகல்ல நடந்த இந்த கறிக்குழம்பு கதையை சொல்லி சிரிச்ச சிரிப்பில அந்த தெருவே  அதிர்ந்து போச்சு !! 

நான் காட்டன் சாரி விரும்பி கட்டுவேன் என்பதால் ஒரு மாமா தன் இன்சார்ஜில் இருக்கும் தறி கூடத்தில் தயாராகும் புடவையில் நல்ல டிசைன், கலர் புடவை நெய்ததும் எடுத்து கொடுப்பார். அந்த புது புடவையை நான் கட்டிட்டு எங்கள் தறி கூடத்திற்கு ஒரு நடமாடும் விளம்பரம் போல சுத்தி சுத்தி வருவதை பார்த்து ஒரே கிண்டல், கலாட்டானு ஏரியா கிறுகிறுத்து போய்டும் !!  

இது போல சின்ன சின்ன அழகான நெகிழ்ச்சியான பல சம்பவங்கள் !! கூட்டுகுடும்பத்து குதூகலங்கள் அனுபவித்தவர்களுக்கு தான்  தெரியும் அது மனதிற்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுக்கும் என்று !!

இன்னும் இரண்டு அண்ணன்கள் தனியாக அதே ஊரில் வேறு இடத்தில் இருக்கிறார்கள். மாதத்திற்கு ஒரு முறை அவங்க இரு குடும்பமும் வந்து ஒரே இடத்தில் சமையல் செய்து ஒண்ணா எல்லோரும் வட்டமாக அமர்ந்து பேசி சிரிசிட்டே சாப்பிடுவோம்.   அந்த நாள் நேரம் போறதே தெரியாது...சாயங்காலம் எல்லா குடும்பத்து குழந்தைகளும் ஒண்ணா விளையாடுவதை ரசிச்சு பார்த்துட்டு இருப்போம்.  

கணவன் மனைவியருக்குள் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே மத்தவங்க அவங்க முகத்தை பார்த்து கண்டுபிடிச்சி அது என்ன என்று விசாரித்து பேசி சரி பண்ணி விடுவார்கள். என் மாமியாருக்கு அப்போ 75 வயது இருக்கும் ஆனாலும் தினம் குறைந்தது 300 ரூபாய்க்கு வருமானம் பார்த்துடுவாங்க ...எப்படினா பாக்டரில பெரிய அடுப்பில வேலை முடிந்ததும் எறிந்த விறகை தண்ணி தெளிச்சு வச்சிடுவாங்க, எல்லாம் கரி ஆனதும் சுத்தம் பண்ணி எடுத்து வித்துடுவாங்க. ஒரு ஆள்வந்து வாங்கிட்டு போய்டுவார். (அவங்க அப்படி பண்ணலைனா, அது அப்படியே சாம்பலா போய்விடும், வேஸ்ட் தானே என்று நாங்க யாரும் இதை பெரிசா நினைக்கமாட்டோம்) உழைப்பின் அருமையை எங்களுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தார்கள்.

இன்று எங்கள் கூட்டு குடும்பத்தின் நினைவுகளை நினைக்க ஒரு சந்தர்ப்பம் வழங்கிய இந்த பதிவுலகத்திற்கு என் சந்தோசமான நன்றிகள் !!

இப்படி பட்ட எங்கள் வீட்டிற்கு ஒருநாள் திருடன் வந்தான், அவனால் நாங்க பட்ட அழகான(?!) ஒரு அவஸ்தையை உங்களுக்கு நேரம் இருந்தால் படித்துத்தான் பாருங்களேன்...திருடன் வந்த வேளை !!


படங்கள் -நன்றி கூகுள்   
Tweet

25 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...