Monday, March 21

3:06 PM
43


பூக்களில் இத்தனை நிறங்களா ? ரசிக்காதவர்கள் யாரும் இல்லை ! அதிலும் ரோஜாவில் கருப்பு நிற பூக்கள் வெகு அபூர்வம் , அதை பார்த்துவிட்டால் போதும் வியந்து அதிசயத்து போய்விடுவோம். !! ஆனால் மனிதரில் கருப்பு என்றால் வெறுப்பு...! அதுவும் ஒரு நிறம் என்பது ஏன் இந்த மனித மனங்களுக்கு புரிவதில்லை. அழகு என்றாலே அது சிவப்பு/வெள்ளை நிறம் கொண்டவர்கள் என்ற முட்டாள்த்தனமான இலக்கணத்தை வகுத்தவன்/வகுத்தவள் யார் ?இன்றும் அதை வலுவாக உறுதிபடுத்திக் கொண்டிருக்கும் நபர்கள் அடிமுட்டாள்கள்.

யார் தவறு ?

ஒரு குழந்தை பிறந்ததுமே உறவுகள் அந்த குழந்தையின் காது மடலையும், இதழையும் பார்ப்பார்கள்...அது கரு நிறத்தில் இருந்துவிட்டால் உடனே பேசத் தொடங்குவார்கள்...குழந்தை கருப்பா பிறந்துவிட்டதே...ஏன் குங்குமபூ எதுவும் சாப்பிடலையா என்ற அங்கலாய்ப்புகள் ! (குங்கும பூவுக்கும் தோல் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை என்று தான் புரிந்துகொள்வார்கள் நம் மக்கள் ?!) உறவுகளின் பேச்சுக்கள்  அக்குழந்தையை பெற்றவளின் மனதில் ரணத்தை ஏற்படுத்தாதா? அதிலும் சிலர், அந்த தாயை பார்த்து  இப்படி கேலியாக சொல்வார்கள் 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்று. ஏன் இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறோம்...!? கருப்பாக பிறந்தது யார் செய்த தவறு ?  

கறுப்பு நிறத்தை பொறுத்தவரை ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை, இருவரும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். என்னவொரு வித்தியாசம் என்றால்,  சில சமயம், 'ஆண் நிறம் கம்மியா இருந்தால் நன்றாக இருக்கும்' என்றும், கறுப்புநிற ஆண் தங்கம், கட்டி வைரம் அப்படி எதையாவது சொல்லி கொஞ்சம் சமாளிச்சுக்கலாம். அதே நேரம் ஒரு பெண் கறுப்பாக இருந்து விட்டால் பிறந்தது முதல் அவள் படும் வேதனைகள் எத்தனை எத்தனை ? கறுப்பு நிற பெண் இருக்கும் அதே வீட்டில் மற்றொரு பெண் வெள்ளையாக பிறந்துவிட்டால் அவ்வளவுதான் இந்த பெண்ணை மட்டும் கொண்டாடுவார்கள், அந்த கருநிற பெண் ஒதுக்க படுவாள். வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும் அவர்கள் முன்னும் வேண்டுமென்றே கருநிற பெண் தவிர்க்கபடுவாள்...?! 

திருமணம்

உதாரணமாக மணமகள் தேவை விளம்பரத்தை பாருங்க, 'நல்ல சிவப்பான பெண் தேவை' என்றே இருக்கும். சிவப்பு அழகான உயர்ந்த தகுதி என்றும் கறுப்பு அவமானச்சின்னம் போல ஏன் பார்க்கப்படவேண்டும். கருப்பாக இருக்கும் தாய் தன் மகனுக்கு 'பெண் சிவப்பா இருக்கணும்' என்று தான் கோரிக்கை வைக்கிறார். பலரும் இதையே எதிர்பார்த்தால் கறுப்புநிற பெண்களின் நிலை,முடிவு...முதிர்கன்னிகளா ??!! 

வேலைக்கு பெண்களை எடுத்துக்கொள்ளும் சில நிறுவனங்கள் கூட படிப்பு, அறிவு, புத்திசாலித்தனம் இவற்றுக்கு முன் நிறத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. 

திரையில்

இன்றைய தலைமுறையினரின் மனதை பெரும்பாலும் ஆக்கிரமித்து கவர்ந்திருப்பது சினிமாத்துறை மற்றும் விளம்பரத்துறை ! அதில் வலம்  வருபவர்களையே தங்களின் ரோல் மாடல்களாக எண்ணி நடந்துகொள்பவர்கள் பலர். வேண்டும்மென்றே கருப்பான/கருப்பு சாயம் பூசப்பட்ட பெண்களை திரையில் காட்டி நகைச்சுவை என்ற பெயரில் 'ரொம்ப பொங்க வச்சிட்டாங்க போல' என்பது போன்ற வசனங்கள் அந்நிறங் கொண்ட பெண்களின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும் என்பதை என்று உணருவார்கள்...? (முன்பு அதிகமாக திரையில் ரௌடி/திருடன் என்றால் கருப்பா காட்டுவார்கள்...!??)

விளம்பரங்களின் பங்கு

கறுப்பை இழிவு படுத்துவதில் முதல் இடம் விளம்பரங்களுக்கு உண்டு. ஒரு விளம்பரத்தில் 7 நாட்களில் சிவப்பான பெண்ணுக்கு வேலையை கூப்பிட்டு கொடுப்பது போல காட்டுகிறார்கள். அந்த பெண்ணை காட்டும்போது கை,உடல் எல்லாம் கருப்பாக இருக்கும், சிவப்பழகு கிரீம் முகத்திற்கு போட்டபின்  முகம் முதல்கொண்டு உடல் முழுதும் சிவப்பாக மாறிவிடும்...இது என்ன  விந்தை ??? நாம இதை பார்த்து அவ்வளவா யோசிக்க மாட்டோம் என்பது அவர்களின் புரிதலா,  இல்லை பார்க்கிறவங்க முட்டாள்கள் என்று முடிவே பண்ணிட்டாங்களா ?? 

இந்தியாவில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுக்கான விளம்பரங்களை போல் மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையாம் சிவப்பு அழகு கிரீம் விளம்பரங்கள்.   

1998 இல் 384 கோடி ரூபாயாக இருந்த சிவப்பழகு சாதனங்கள் விற்பனை தற்போது 2 ஆயிரம் கோடியாக  இருக்கிறது என்கிறது ஒரு நாளேடு ?!!! 

முதலாளிகளின் கணக்கு

இந்தியாவில் மட்டும் அதிக அளவிற்கு சிவப்பழகு சாதனங்கள் விற்பனையாவதின் பின்னணியில் ஒரு வியாபார நுட்பம் இருக்கிறது. இந்த சாதனங்கள் வெளிநாடுகளில் அதாவது வெள்ளைகாரர்களிடம் விலைபோகாது, மேலும் கறுப்பின மக்களான ஆப்ரிகர்களிடம் வேலைக்காகாது...இரண்டுக்கும் நடுவில் இரு நிறங்களும் கலந்திருக்கும் இந்தியாவில் தான் அதுவும் 100 கோடிக்கும் மேல மக்கள்தொகை, இவர்களிடம் சிவப்பு நிறம் பற்றிய முக்கியத்துவத்தை/பெருமையை ஏற்படுத்திவிட்டால் சுலபமாக தொழில்/விற்பனை பண்ணிவிடலாம் என்பதுதான் அந்த கணக்கு.....!!
   
உலக அழகிகளாக இந்திய அழகிகளை தொடர்ந்து தேர்ந்தெடுப்பதின் பின் இந்த தயாரிப்பாளர்களின் பங்கு இருக்கிறது என்று கூட ஒரு பேச்சு இருக்கிறது. 

அறிவியல் அறிஞர்கள் என்ன சொல்றாங்க ?

முகத்தின் மேற்பரப்பில் போடப்படும் எந்த ஒரு அழகு சாதனமும், நிரந்தரமாக முகத்தின் நிறத்தை மாற்ற முடியாது, அதுவும் தவிர சில வாரங்களில் சிவப்பழகு என்பது எல்லாம் சாத்தியமே இல்லை என்று உறுதியாக சொல்கின்றன ஆய்வுகள். மேலும் இந்த கிரீம்களால் தோலின் நிறமியை குறைத்து தோல் அலர்ஜி, புற்றுநோயில் வேறு கொண்டுபோய் விட்டு விடுகிறது ! 


அழகின் நிறம் சிவப்பு என்று எந்த வேதமும், அறிவியலும் வலியுறுத்தவில்லை. ஆனால் ஆரோக்கியமான நிறம் கருப்பு என்று ஆய்வுகள் கூறி வருகின்றன.


கறுப்பை பழிக்காதே !

கறுப்பு நிறம் அழகு என்று என்று விளம்பரமும் சொல்வதில்லை மாறாக கறுப்பை மாற்றுவது எப்படி என்று ஒரு தவறான வழிக்காட்டுதலை பதிய வைக்கிறது. 

கறுப்பு நிறத்தை தாழ்த்தி கேவலப்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் சிவப்பழகு கிரீம் தயாரிப்பாளர்கள் !?       பெண்களுக்கு என்று இருந்த இந்த சிவப்பழகு கிரீம்கள் இப்போது ஆண்களுக்கும்.....?!! இப்படி மொத்த சமூகத்தையும் சிவப்புதான் சிறப்பு என்று ஒத்துக் கொள்ளவைக்கும் இந்த விளம்பரங்களை எடுப்பவர்களை வெளியிடுபவர்களை, எவ்வாறு கட்டுபடுத்த போகிறோம்....?! விளம்பரம் எடுக்க காரணமான கிரீம் தயாரிப்பவர்களை என்ன செய்ய போகிறோம்.....?!  
  
நம் சமூகமும், மீடியாக்களும் போட்டி போட்டு கொண்டு கருப்பு நிறத்தை பழிக்கின்றன...இதனால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று யாரும்  எண்ணுவதில்லை, அதை பற்றி கவலைபடுவதும் இல்லை. மனதளவில் நொறுங்கிபோகும் அத்தகையவர்களின் தன்னம்பிக்கை சிதறுவதை பற்றி யாருக்காவது அக்கறை இருக்கிறதா ?!  

                                    கறுப்பு ஒரு நிறம் ! 
                          கேவலம் அல்ல பழிப்பதற்கு ! 
                                கறுப்பை பழிக்காதே !!பின்குறிப்பு

நிற வெறி பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்ற எனது எண்ணத்தின் சிறு முன்னோட்டமே இந்த பதிவு, இது கருப்பு நிறத்தை குறைசொல்லும் சமூகத்தையும், மீடியாக்களை பற்றிய சிறு பகிர்வு. இந்த நிறம் சிறுகுழந்தைகளின் மனதிலும் தவறாக விதைக்கபடுகிறது என்பதை அறிவீர்களா ? மற்றொரு சமயத்தில் விரிவாக பகிர்கிறேன். 


படம் - நன்றி கூகுள்   


இங்கேயும் வாங்க...!


கழுகின் இன்றைய இலக்கு 

Tweet

43 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...