Monday, October 18

11:05 AM
60


நாலு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மை  சம்பவம் இது. எங்களது பாக்டரியில் மருந்து பொருட்களை (தீக்குச்சி செய்ய தேவைப்படும் குளோரேட், சல்பர் போன்ற பொருட்கள்) தனி தனி அறைகளில் ஸ்டாக் செய்து வைத்து இருப்போம். அந்த அறைகளை கவனித்து கொள்வதற்காக இரவில் ஒரு காவலாளி அந்த அறைகளுக்கு வெளியில் படுத்து இருப்பார்.  அன்று மழை பெய்து கொண்டிருந்ததால் அதனால் உள்ளே ஒரு இடத்தில் படுத்து இருந்திருக்கிறார்.

நடு ராத்திரியில எங்க வீட்டு கதவை  பலமா தட்டற சத்தம் கேட்டுச்சு .....என்னவோ ஏதோனு பயந்துட்டு (தீ விபத்து நடப்பது இந்த தொழிலில்  சகஜம்) வேகமா நானும் என் கணவரும் எழுந்து வந்து கதவை திறந்தோம் ....வெளியே அந்த காவலாளி நடுங்கிட்டே "முதலாளி குளோரேட் ரூம்ல யாரோ இருக்கிற மாதிரி இருக்கு....நீங்க உடனே வாங்க' ன்னு  சொல்லவும் எங்களுக்கும் ஒரே படபடப்பு.... உடனே என் கணவர் ஒரு கம்பை கைல எடுத்திட்டு வேகமா அந்த இடம் நோக்கி நடக்க தொடங்கிட்டார்....எனக்கு ஒரே பயம் இவர் தனியா போய் என்ன பண்ணுவாரோ...உள்ள இருக்கிறவன் கத்தி, அரிவாள்  ஏதும் வச்சிருந்தா.... ஏடா கூடாம ஆச்சுனா என்ன பண்ணனு....பக்கத்தில இருக்கிற இவரோட அண்ணன்ங்க வீட்டு  கதவுகளையும் ஓடி போய் தட்டினேன்.....ஒருத்தரையும்  விடலையே ...வயதான என் மாமனார், மாமியார் முதல் அத்தனை பேரும் பதறி எழுந்து வந்திட்டாங்க...(எங்க குடும்பம் கொஞ்சம் பெரிசு...மொத்த உருப்படி ஒரு 17 தேறும்...!)

வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளி  தான் அந்த அறை உள்ளது.... ஆண்கள் மட்டும் அந்த ரூம் பக்கம் போக நாங்க எல்லோரும் ஒரு வித திகிலோட அந்த பக்கமே பார்த்திட்டு இருந்தோம்....கொஞ்ச நேரம் அமைதியா போச்சு....திடீர்னு  ஒரே அடிதடி சத்தம்...யார் யாரை அடிக்கிறாங்கன்னு  தெரியாம அக்கா'ஸ் 'எல்லோரும் ஆண்டவா என் வீட்டுகாரரை   காப்பாத்து'ன்னு வேண்டிட்டு இருந்தாங்க....ஆனா நான் மட்டும் அந்த திருடனை காப்பாத்துன்னு வேண்டினேன்....(அவ்ளோ நம்பிக்கை எனக்கு எங்க வீட்டு ஆண்கள் மேல....!!) 

அப்புறம் மெதுவா அந்த திருடனை இழுத்திட்டு  வந்தாங்க....(என் நம்பிக்கை  வீண் போகலைங்க...) போன வேகத்தில எங்க ஆட்கள் ஆளுக்கு ஒரு அடிதான் கொடுத்திருக்காங்க....ஆனா அந்த திருடன் ரொம்ப பாவங்க...சோர்ந்து போய்ட்டான்....(எங்க வீட்டு குட்டிஸ் எல்லாத்துக்கும் ஒரே சந்தோசம் இப்பதானே முதல் முறையா திருடனை நேரில் பாக்கிறாங்க.....நாளைக்கு ஸ்கூல்ல  போய் எப்படி பெருமை அடிக்கலாம்னு அப்பவே பிளான் பண்ண ஆரம்பிச்சிடுசுங்க )


அப்புறம் மாமனார் தலைமையில் ஒரு சின்ன மீட்டிங் 'இந்த திருடனை இப்ப என்ன செய்யலாம் என்று..?' ஆளாளுக்கு ஒவ்வொரு ஆலோசனை சொன்னார்கள்...முடிவாக காலையில் போலீஸ்கிட்ட ஒப்படைச்சிடலாம்.....இப்ப கம்பெனி முன்பாக இருக்கும் லாம்ப் போஸ்டில் கட்டி வைக்கலாம் என்ற  யோசனை குரல் வாக்கெடுப்பில் தேர்ந்து எடுக்க பட்டது.....! ஆனால் கட்டி வைச்ச பிறகு  கயிறை அறுத்திட்டு ஓடிட்டா என்ன செய்ய என்று ஆண்களில் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் முழிச்சிட்டு காவல் இருக்கணும்  என்றும் முடிவு செய்திட்டு மத்த எல்லோரும் தூங்க போய்ட்டோம்....நேரம் மூணு மணி ஆச்சு......ஒரு மணி நேரம் நிம்மதியா தூங்கி இருப்போம்....வெளியில் மறுபடியும் சத்தம்....! ஏற்கனவே எல்லோரும் கொஞ்சம் அலர்ட்டா  இருந்ததாலே...சட்டுன்னு எழுந்திட்டோம்....இப்ப என்ன பிரச்சனைன்னு வந்து பார்த்தா, நின்ன போன மழை மறுபடி  சோன்னு கொட்டுது....!! அந்த திருடன் மழையில நல்லா  நனைஞ்சிட்டு  நடுங்கிட்டு இருந்தான் (அடி வாங்கின உடம்பு வேறையா..... நல்லாவே நடுங்கினான் )


என் மாமனார் 'ஏம்பா, அவன் செத்து கித்து போய்ட போறான், ரூம்  உள்ளே கொண்டு போய் அடைங்க' னு சொல்லவும்....அடடா இது என்னடா புது சோதனைன்னு அவனை கொண்டு போய் ஒரு ரூம்ல அடைச்சாங்க....! இப்ப தூக்கம் சுத்தமா போச்சு...எங்க அக்கா மழைக்கு சூடா டீ குடிங்கன்னு 'கருப்பட்டி இஞ்சி போட்டு ப்ளாக் டீ'  கொண்டு வர மொத்தமா நாங்க ரவுண்டு கட்டி உட்கார்ந்து.....அழகா டீ குடிச்சிட்டு பேசி பேசியே  இரவை ஒரு வழியா போக வச்சிட்டு விடியலை வர வச்சிட்டோம்....! மணி 5 ஆனதும் என்னைக்கும்  போல அவங்க அவங்க வேலையை வேகமா பார்க்க ஆரம்பிச்சோம்.....ஏழு மணி ஆனதும் தொழிலாளர்கள் வேற வர தொடங்கிட்டாங்க....அப்புறம் என்ன எல்லோரும் கூடி கூடி பேசி திருடனை ஹீரோவாகிட்டாங்க...


மணி ஒன்பது ஆச்சு....இனிதான் தான் கிளைமாக்ஸ்....அந்த திருடனை காரில் ஏத்திட்டு  காவல் நிலையத்துக்கு என் கணவர் அழைத்து கொண்டு போனார். இங்கிருந்து போகும் போது கொஞ்சம் தள்ளாடிட்டேதான் போனான்...அங்க போனதும் இன்ஸ்பெக்டர் முன்னாடி அப்படியே விழுந்திருக்கான் (ஆனா அது ஆக்டிங்க்னு அப்ப என் கணவருக்கு தெரியல ) இன்ஸ்பெக்டரும் பதறி, 'என்னங்க சார் ரொம்ப அடிச்சிடீங்களா.....ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆக போகுது....அவன்தான் ஒண்ணு திருடலையே...பேசாம அவன் ஊர் பேரை கேட்டுட்டு அந்த ஊருக்கு பஸ் ஏத்தி விட்டுடுங்க' ன்னு சொல்லி இருக்கிறார்....!!? இவரும் நம்ம காவல்துறையின்  மனிதாபிமானத்தை மெச்சிட்டு (திட்டிட்டுதான்.....!) அந்த திருடனுக்கு பூரி செட் வாங்கி கொடுத்து சாப்பிட வச்சு,  கையில செலவுக்கு ஒரு 200 ரூபாயும் கொடுத்து பஸ் ஏத்தி விட்டுட்டு வீடு வந்து சேர்ந்தார்............!!?


இதில இருந்து நாங்க கத்துகிட்ட பாடம் என்னனா.......அதை நான் எப்படிங்க  சொல்றது...... உங்களுக்கே  இப்ப புரிஞ்சிருக்குமே....!!?

திருட வந்தவனை நல்லா (கவனிச்சு )உபசரிச்சு விருந்தாளி போல அனுப்பி வச்ச இந்த சம்பவம்.....ஒரு மழைநாள் இரவில், திக் திக்னு திரில்லா ஆரம்பிச்சி....அடிதடி சண்டை நடந்து..... ஒரு பஞ்சாயத்து ( இங்க சொம்புக்கு பதிலா டீ கப் ) சீன் வேற....குட்டிஸ் கலாட்டா....பெண்களின் வித்தியாசமான வேண்டுதல்கள்.....கிளைமாக்ஸ் சீன்ல போலீஸ் வருவதற்கு பதிலா  நாங்க ஸ்டேஷனுக்கு போய்....அப்புறம் ஒரு சின்ன டுவிஸ்ட்....கடைசியில் சுபம் (எங்களுக்கு இல்லை அந்த திருடனுக்கு )


வாசலில் என் கவிதை

Tweet

60 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...