Wednesday, September 22

11:03 AM
47


அறிவியல் தொழில் நுட்பங்களால் நன்மைகள் பல. ஆனால் அவற்றை தவறாக பயன்படுத்தும் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன.  அதில் இப்போது முக்கியமாக இருப்பது செல்போனும், இணையமும். இவற்றால்  உலகம் மிகவும் சுருங்கி விட்டதுதான். அதே நேரம் சிலரின்  கையால் தவறாக பயன்படுத்தபடுவதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.  பெண்கள் இதனை உணர்ந்து இருந்தும் சில நேரம் அவர்களையும் அறியாமல் தங்களுக்கு தாங்களே குழிகளை தோண்டி கொள்கிறார்கள்.

ஜெஸ்ஸி

'செக்ஸ்டிங்' என்ற ஒரு புதிய கலாசாரம் இப்போது பரவிக்கொண்டு  வருகிறது. காதலிக்கும்போது தன் காதலன்தானே என்று தன் நிர்வாணப்படங்களை அனுப்பி இருக்கிறார் ஜெஸ்ஸி லோகன் என்ற இளம் பெண். பின்னர் காதல் கசந்து இருவரும் பிரிந்த பிறகு செல்போனில் இருந்த தன் முன்னால் காதலியின் படத்தை அவன் பலருக்கும் அனுப்பி இருக்கிறான். அதை பார்த்தவர்களின் கேலி பார்வையை  காண  முடியாமல் தவித்து தற்கொலை செய்து கொண்டார் ஜெஸ்ஸி...?!! 

பத்திரிகை வரை வந்த விஷயம் இது.  ஆனால் வெளியில் தெரியாமல் மனதிற்குள் புழுங்கி கண்ணீர் விட்டு தவித்து கொண்டு இருப்பவர்கள் எத்தனையோ பெண்கள். பெண்களின் பலகீனத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள். யாரையும் நம்ப முடியாத இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சுயமாக தங்களை பாதுக்காத்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. 

நெருங்கிய நண்பனாகவோ , காதலனாகவோ இருந்தாலுமே கவனமுடன் தகவல்களை பரிமாறி கொள்வது  மிக அவசியம். சாதாரண மின்னஞ்சல், செல்போன் தகவல்கள் கூட பிரச்னையை கொண்டு வரலாம். நம்மை  சுற்றிலும் வம்புக்கு வலைவிரிப்பவர்கள் தான் அதிகம்  இருக்கிறார்கள் என்பதை மறக்கக்கூடாது. 

போனில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நீங்கள் இருந்தால் பேசுவதை உடனே நிறுத்தி விடுங்கள் . உங்களுக்கு தெரியாமலேயே உங்களின் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்படலாம் அல்லது பதிவு செய்யப்படலாம்.


நட்பு 

நெருங்கி பழகிய நண்பர்கள் ஒரு கட்டத்தில் ஒரு சில காரணங்களால்  பிரிய நேரலாம். ஆனால் முன்பு பழகிய காலத்தில் நடந்த உரையாடல்களை (உதாரணமாக சாட்டிங், மெயில்)  வேறு பலருக்கும்  அதை அனுப்பி, பழைய நண்பரின் மனதை கொல்கிறார்கள் . இது எவ்வளவு பெரிய துரோகம், அநாகரீகம். நம்பிக்கை வைத்து கருத்துக்களை, சொந்த விசயங்களை பரிமாறிவிட்டு பின் பிரிந்த பின் அவரது சொந்த விசயங்களை பிறரிடம் சொல்லி கேலி பொருளாக்குவது மனவலியைக் கொடுக்கும்.  

மனித நேயம் என்பது கொஞ்சங் கொஞ்சமாக நம்மிடையே கரைந்து , மறைந்து வருகிறது. தூய்மையான அன்பு கொள்ளுங்கள். கருத்து விவாதம் செய்யுங்கள். தேவை இல்லாமல் பிறர் மன உணர்வுகளை புண்படுத்தாதீர்கள். 

 " நமக்கு யாரும் துரோகம் செய்தால் எப்படி தவித்து போவோம்? அதை நாம் அடுத்தவருக்கு செய்வது என்ன நியாயம்..??! " 

" நண்பனில் சிறந்தவன் என்று யாரும் இல்லை...நண்பன் என்றாலே சிறந்தவன் தான்....!! "

அத்தகைய நட்புக்கு ஒரு சிலர் ஏற்படுத்தும் கெட்ட பெயரால் நல்ல நண்பர்களுக்கும் அவ பெயர் ஏற்படுகிறது.
ஆச்சரியமான ஒரு தகவல் - காந்தி நியுரான்


சில நேரம் அடுத்தவர்களின் வேதனைகளை, வலிகளை காணும் போதோ அல்லது கேள்வி படும்போதோ நம்மையும் அறியாமல் கண் கலங்கி விடுகிறோம். இதற்கு காரணம் என்னவென்றால் நம்முடைய மூளையில் உள்ள 'எம்பதி நியுரான்கள்' தான். இந்த உணர்வு காந்தியடிகள் அவர்களுக்கு அதிகமாக இருந்ததால் தான் இந்த நியுரான்கள் ' காந்தி நியுரான்கள் ' என்றும் கூட அழைக்கப் படுகின்றனவாம்...!


" கருணையே வடிவானவர்களையே கூட காலம் ஒருநாள் அழைத்து சென்று கணக்கை முடித்து கொள்ளும். துடிக்கின்ற இதயம் ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் நிற்கும்போது குடும்பத்துக்கு வெளியேயும்  கொஞ்ச பேரையாவது  மனதளவில் துடிக்கிற வைக்கிற மாதிரி, நல்லவர்களாக வாழ்ந்து வாழ்வை நிறைவு செய்து விட்டு போவோமே..!! "

"எல்லா உயிருக்கும் முடிந்தவரை நன்மையை மட்டுமே செய்வோம் ..!!"

நட்பை போற்றுவோம்....நட்பை வளர்ப்போம்.....

தொடர்ந்து வரும் அடுத்த பதிவு - கண்டனம்.

Tweet

47 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...