Thursday, June 17

1:03 PM
23


குறைகள் அல்ல சில பிழைகள்

குறை என்ற வார்த்தை எனக்கு குறையாகவே படுகிறது. குறையை சரி செய்வது சிரமம். எல்லாமே  பிழைகள் தான், இயன்றால் திருத்தி கொள்ளலாம், அல்லது மாற்றி கொள்ளலாம்! வாழ்க்கை வாழ்வதற்கே!!   

திறமைகளை அங்கீகரிக்காத தன்மை 

இயற்கையாகவே  பெண்கள் அனைவருமே ஏதாவது ஒரு தனி  திறமையை பெற்றவர்களாக தான் இருப்பார்கள்.  அது என்னவென்று பார்த்து அதை செய்வதற்கு உற்சாக படுத்தலாம்...! இதனால் அவர்களின் மனம் மகிழ்ச்சி அடைவதுடன், கணவரிடம் பாராட்டை பெறவேண்டும் என்ற உற்சாகத்தில் இன்னும் சிறப்பாக செய்து அசத்துவார்கள். (பதிவுலகில் இருக்கும் பல பெண்களும் தங்கள் கணவர் கொடுக்கும் ஊக்கத்தில் தான் எழுதுகிறார்கள் என்பது என் அபிப்பிராயம்! கொடுத்து வைத்தவர்கள், நான் உள்பட)

ஆனால் சில ஆண்கள் தங்களது மனைவியை சுதந்திரமாக செயல் பட விட்டால் எங்கே நம்மை மதிக்காமல் போய்விடுவாளோ என்ற குறுகிய மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். இப்படி பட்டவர்கள் தான் மனைவியின் எந்த கருத்துகளுக்கும் மதிப்பு கொடுப்பதே இல்லை.  

பொறுமை இல்லாத தன்மை குடும்பம் என்றால் பல சிக்கல்களும் வரத்தான் செய்யும், ஆனால் எதையும் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று பொறுமை இல்லாமல், அவசர படும் கணவர்களால் பெண்கள் பல நேரம் அவதி படுகிறார்கள். எதையும்  பொறுமையுடன் நோக்கும் சிறந்த குணம் பெண்களுக்கு  இருப்பதால்தான் பல வீடுகளிலும் தாம்பத்தியம் தள்ளாடாமல் போய் கொண்டு இருக்கிறது.

மனைவியையும் கொஞ்சம் கவனிங்க!

பல ஆண்களும் செய்யும் பெரிய தவறே மனைவியின் உணர்வை மதிக்காமல் அலட்சியபடுத்துவது...?  அவளுக்கும் சில ஆசைகள் இருக்கும், அதையும்  புரிந்து கொண்டு அல்லது அவளிடமே கேட்டு முடிந்தவரை நினைவேற்றினால் தன் விருப்பமும் நினைவேறுகிறது என்ற மகிழ்ச்சியில் உங்களிடம் இன்னும் அதிகமாக அன்பு செலுத்துவாள். அப்புறம் என்ன ?  நீங்க ( அன்பால் )சுத்திவிட்ட பம்பரம்தான் அவள்...!!  ஒரு சின்ன ஆதரவான அணைப்பு ஒன்றே போதும் பல காவியங்கள் அங்கே பிறக்கும்.   ( இவ்வளவு சொன்னால் போதும் என்று நினைக்கிறேன், நான் எதை பற்றி சொல்கிறேன் என்று புரிந்து இருக்கும்...?!)   


அலட்சியம் (அதிகார மமதை)


உயர்ந்த  பதவியில் (உதாரணமாக அரசாங்க அதிகாரி) இருக்கும் சில கணவர்கள், வீட்டுக்கு வந்த பின்னும் தங்களது அதிகாரத்தை வீட்டிலும் காட்டுவார்கள்.  வீட்டையும் அலுவலகமாக எண்ணி அங்கே கிடைத்த அதே அளவு மரியாதையை இங்கும் எதிர் பார்ப்பார்கள். வீட்டில் இருக்கும் மனைவி ஒன்றும் சம்பளம் வாங்கும் அலுவலக பணியாள் இல்லையே ? 

வீட்டிற்கு வரும்போது வாசலில்  செருப்பை கழட்டும் போதே தனது பதவி  போர்வையையும் கழட்டி விட்டு உள்ளே செல்ல வேண்டும். அப்போதுதான் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாகவும், பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாகவும் இருக்க முடியும். 

பதவி காலம் முடிந்து ஓய்வு பெற்றபின், இதே மனைவியின் முகத்தை தான் பார்த்து, வாழ்வின் மீதி காலத்தை ஓட்ட வேண்டும் என்பதை நினைவில் கொண்டு நடந்து கொள்ளுங்கள். "அன்பை இப்போது விதைத்தால் தான், பின்னால் அதே அன்பை பல மடங்காய் அறுவடை செய்ய முடியும்"    

சில தொழிலதிபர்களும் இதே ரகம் தான்!  வெளியில் இருக்கும் டென்சனை வீட்டிலும் அப்படியே பிரதிபலிப்பார்கள்.  அப்படி கஷ்டப்பட்டு உழைப்பது யாருக்காக ?, தன் மனைவி மக்களுக்காக தானே! உங்கள் பணம் கொடுக்கும் சந்தோசத்தை விட, அவர்கள் அருகாமையில் அன்பாக நீங்கள் இருக்கும்போது கிடைக்கும் சந்தோசம் பெரிதல்லவா?

கிடைக்கும் சந்தர்பத்தில் கொஞ்ச நேரத்தை அவர்களுக்கே அவர்களுக்காக  ஒதுக்குங்கள். ஒரு நல்ல தகப்பனாக, நல்ல கணவனாகத்தான் இருக்கிறோம் என்ற மனநிறைவாவது உங்களுக்கு கிடைக்கட்டும்!!

மனைவிக்கு உண்மையாக இருங்கள் (இயன்றவரை)!!? 

உங்களை மற்றவர்கள் மதிக்கணும் என்று எதிர்பார்க்கும் அதே நேரம், உங்கள் மனைவி உங்களை முதலில் மதிக்கும் படி நீங்கள் நடந்து கொண்டாலே போதும், பிறரிடம் இருந்து மதிப்பு தானாகவே தேடிவரும்!!

இந்த பிரிவின் அடுத்த பாகம் நாளை வெளி வரும்... 
   Tweet

23 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...